நவ ராய்ப்பூர்: காங்கிரசின் உயர்மட்ட முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட காரிய கமிட்டியின் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கே வழங்கிட வழிகாட்டுதல் குழுவில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாடு சட்டீஸ்கரின் நவ ராய்ப்பூரில் நேற்று தொடங்கியது. இதில், இந்த ஆண்டு நடக்க உள்ள 9 மாநில தேர்தல்கள், கட்சியில் மேற்கொள்ள உள்ள சீர்த்திருத்தங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளன. இந்நிலையில், மாநாடு தொடங்கிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டுதல் குழு நவ ராய்ப்பூரில் கூடியது. இதில், கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட 45 உறுப்பினர்கள் பங்கேற்றனர். கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்வில்லை. வழிகாட்டுதல் குழு கூட்டத்தில், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், காரிய கமிட்டியின் 25 உறுப்பினர்களை நியமிக்க கட்சி தலைவர் கார்கேவுக்கு அதிகாரம் வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இதற்கு வழிகாட்டுதல் குழுவின் சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் பின்னர் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
கட்சியில் பிளவு ஏற்படுவதை தடுக்க, காரிய கமிட்டி உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் கட்சி தலைவருக்கே வழங்கப்படுவது பாரம்பரியமாக இருந்து வருகிறது. இதுதவிர, 85வது காங்கிரஸ் மாநாட்டின் நிகழ்ச்சிகளுக்கும் வழிகாட்டுதல் குழு ஒப்புதல் வழங்கியது. மேலும், கட்சியின் 32 விதிகளில் 16 திருத்தங்கள் செய்யவும் வழிகாட்டுதல் குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, காங்கிரஸ் காரிய கமிட்டியில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் முன்னாள், இன்னாள் பிரதமர்கள், முன்னாள் கட்சி தலைவர்கள், மக்களவை, மாநிலங்களவைக்கான கட்சி தலைவர்கள் காரிய கமிட்டியின் நிரந்தர உறுப்பினர்களாகவும் நியமிக்க வழிவகுக்கப்பட்டுள்ளது.
* சோனியா, ராகுலுக்கு உற்சாக வரவேற்பு காங்கிரசின் 85வது மாநாட்டில் பங்கேற்க கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரும் நேற்று மதியம் ராய்ப்பூருக்கு சிறப்பு விமானத்தில் வந்தனர். அவர்களுக்கு பாரம்பரிய நடனத்துடன் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.