காரமடை அரங்கநாத சுவாமி கோயில் தேர்த்திருவிழா: 28ம் தேதி துவக்கம்; தேர் புதுப்பிக்கும் பணி தீவிரம்

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் திருத்தேர் விழா நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு தேரினை புதுப்பிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மாசி மகத்திருத்தேர் பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டாக கொரோனா காரணமாக பக்தர்கள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு மாசி மக தேர் திருவிழா வரும் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இதையொட்டி, தினமும் அரங்கநாத சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். மார்ச் மாதம் 4ம் தேதி பெட்டத்தம்மன் அழைப்பு, அதைத் தொடர்ந்து 5ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடக்க உள்ளது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் மார்ச் 6ம் தேதி மாலை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

திருத்தேர் விழா பிப்ரவரி 28ம் தேதி முதல் மார்ச் மாதம் 10ம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சுமார் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தேரை சுற்றிலும் இருந்த தகரங்கள் மற்றும் கம்பிகளை அகற்றி விட்டு, தேரை புதுப்பிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாசிமக தேர்விழா துவங்க உள்ளதால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் தற்போதே அதிகரிக்க துவங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.