சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே நத்தமாடிப்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு கோலாகலமாக துவங்கியது. சீறி வந்த காளைகளை வீரர்கள் அடக்கினர். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ளது நத்தமாடிப்பட்டி. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்தாண்டு தைப்பொங்கலுக்கு நடைபெறாததால் இன்று கோலாகலமாக நடந்தது. ஜல்லிக்கட்டுக்காக திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காளைகள் கொண்டு வரப்பட்டன. 475 காளைகள், 150 வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.
முன்னதாக காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இந்திய விலங்குகள் நலவாரிய தலைவர் மிட்டல் கொடியசைத்து ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தார். ஊர் வழக்கப்படி முதலில் கோயில்காளை அவிழ்த்து விடப்பட்டது. பின் வாடிவாசல் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கினர்.
ஒரு சில காளைகள் களத்தில் நின்று விளையாடின. பிடிபடாத காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் தங்க காசு, வெள்ளி காசு, அண்டா, பானை, கட்டில், வேட்டி, துண்டு பரிசாக வழங்கப்பட்டது. காளைகள் முட்டியதில் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஜல்லிக்கட்டை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்தனர். எஸ்பி பாஸ்கரன் உத்தரவின் பேரில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.