மேட்டுப்பாளையம்: சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட உளியூர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (58), விவசாயி. இவர் உளியூர் வனப்பகுதியில் தனக்கு சொந்தமான ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது, வனப்பகுதியில் புதர்மறைவில் இருந்த ஒற்றை காட்டு யானை ராதாகிருஷ்ணனை தாக்க முயன்றுள்ளது. அப்போது, யானை வருவதை கண்ட ராதாகிருஷ்ணன் திடீரென அங்கிருந்து அலறி அடித்து ஓட முயற்சித்துள்ளார்.
இதையடுத்து காட்டு யானை விடாமல் துரத்திச்சென்று ராதாகிருஷ்ணனை தூக்கி வீசியது. இதில் ராதாகிருஷ்ணனின் மார்பு, கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஓடி வந்து காட்டு யானையை விரட்டிய பின் ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து தகவல் இருந்த சிறுமுகை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.