சென்னை: சென்னையில் 3 மண்டலங்களில் உள்ள பொதுக் கழிவறைகளை பொதுமக்கள், தனியார் பங்களிப்பு திட்டத்தின் கீழ் 8 ஆண்டுகள் பராமரிக்கும் வகையில் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொள்ளவுள்ளது.
சென்னையில் பொது இடங்களில் கழிவறை வசதியை மேம்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி மண்டலம் 5, 6 மற்றும் 9-வது மண்டலத்தின் மெரினா கடற்கரை ஆகிய இடங்களில் வடிவமைப்பு, கட்டுமானம், செயல்படுத்துதல், திருப்பி அளித்தல் என்ற முறையின் கீழ் கழிவறைகளை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்து டெண்டர் கோரி இருந்தது.
டெண்டர் இறுதி செய்யப்பட்டு பணிகளை மேற்கொள்ள ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 362 இடங்களில் ரூ.430.11 கோடி மதிப்பில் பொதுமக்கள், தனியார் பங்களிப்புடன் பொதுக் கழிவறைகள் கட்டப்படவுள்ளன. இதற்கான பணிகள் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கப்படவுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன் கூறுகையில், “5-வது மண்டலத்தில் 51 கழிவறைகள் புதிதாக கட்டப்படவுள்ளன. 71 கழிவறைகளில் சிறிய அளவில் மேம்பாட்டு பணியும், 105 கழிவறைகளில் பெரிய அளவில் மேம்பாட்டு பணியும் மேற்கொள்ளப்படவுள்ளது.
6-வது மண்டலத்தில் 36 கழிவறைகள் புதிதாக கட்டப்படவுள்ளன. 17 கழிவறைகளில் சிறிய அளிவில் மேம்பாட்டு பணியும், 81 கழிவறைகளில் பெரிய அளவில் மேம்பாட்டு பணியும் மேற்கொள்ளப்படவுள்ளன. 9-வது மண்டலத்தில் மெரினா கடற்கரையில் 3 கழிவறைகள் புதிதாக கட்டப்படவுள்ளன. 8 கழிவறைகளில் சிறிய அளவிலான மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்தப் பணிகள் அனைத்தும் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும். ஓராண்டு காலத்திற்குள் கட்டுமானப் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேம்பாடு மற்றும் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றவுடன் கழிவறைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். இந்த நவீன கழிவறைகளில் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் புகார்களை தெரிவிக்கும் வசதி, சிசிடிவி, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற கட்டமைப்பு உள்ளிட்டவை இருக்கும்” என்று அவர் கூறினார்.