சேலம் அதிமுகவிலா இப்படி… ஜெ., பிறந்த நாள் விழா அவ்வளவு தானா? ர.ர.,க்கள் கவலை!

அதிமுக பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு வந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கிவிட்டது. கூடவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் விழா வந்துள்ளது. எனவே இதை எடப்பாடி தரப்பினர் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர் என எதிர்பார்க்கப்பட்டது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வழக்கமாக ஜெயலலிதா பிறந்த நாளை பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபடுவர்.

ஜெயலலிதா பிறந்த நாள்

பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி திருவிழா கோலமாக இருக்கும். மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் சென்னையில் தான் முகாமிட்டிருப்பர். இம்முறை சிறிய கேக்குடன் முடித்து கொண்டனர். கடந்த ஆண்டு ஜெயலலிதா பிறந்த நாளில்
எடப்பாடி பழனிசாமி
,
ஓ.பன்னீர்செல்வம்
என இருவரும் அதிமுக தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

ஓ.பன்னீர்செல்வம் அவுட்

இந்த ஆண்டு அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு வெளியாகி ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டும் அளவிற்கு களம் மாறிவிட்டது. இந்நிலையில் எடப்பாடியின் சொந்த ஊரான சேலத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என எதிர்பார்த்தால் அப்படி எதுவும் இல்லை என்று ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவித்துள்ளனர். பெரிய அளவில் கூட்டமும் இல்லை.

சேலத்தில் கொண்டாட்டம்

ஜெயலலிதாவின் சிலைக்கு கடமைக்காக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு சென்றுள்ளனர். சேலம் மாநகரில் அண்ணா பூங்கா வளாகத்தில் உள்ள மணி மண்டபத்தில் அதிமுகவினர் திரண்டனர். மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் தலைமையில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.

ர.ர.,க்கள் கவலை

இதனைத் தொடர்ந்து ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக கிளம்பி சென்று விட்டனர். நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பொதுக்கூட்டங்கள், கட்சி கூட்டங்கள் என எதுவும் இல்லை. இது உண்மையான அதிமுக விசுவாசிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவின் ஒவ்வொரு பிறந்த நாளும் எப்படி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இனிமேல் எடப்பாடி தான்

அந்த நாட்கள் மீண்டும் திரும்புமா? என்று ஏங்கும் அளவிற்கு நிலைமை சென்றிருக்கிறதாம். தற்போது நிரந்தர பொதுச் செயலாளர் என்ற நாற்காலியை நோக்கி வீறுநடை போட்டுக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி படிப்படியாக ஜெயலலிதாவின் முக்கியத்துவத்தை குறைத்து வருகிறாரா? என்ற கேள்வியை அரசியல் பார்வையாளர்கள் முன்வைக்கின்றனர்.

இடைத்தேர்தலுக்கு முக்கியத்துவம்

அதிமுகவில் நம்பிக்கை நாயகனாக எடப்பாடி மாறிவிட்டார். இருப்பினும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களை மறக்காமல் இருந்தால் சரி என்ற பேச்சை கேட்க முடிகிறது. இதுபற்றி எடப்பாடி தரப்பினர் சிலர் கூறுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக தீவிரமாக செயல்பட்டு வருகிறோம்.

அதனால் இம்முறை ஜெயலலிதா பிறந்த நாளை பெரிதாக கொண்டாட முடியவில்லை. ஏற்கனவே ஒரு வெற்றி கிடைத்துவிட்டது. அடுத்ததாக ஒரு வெற்றியை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம். அதன்பிறகு கட்சி பணிகளில் ஈடுபடுவோம். அடுத்தமுறை பாருங்கள் என்று பதிலளித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.