மதுரை: மாநகராட்சி நிர்வாகத்தில் துணை மேயருக்கான அதிகாரம் என்ன என்பது குறித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிகாரிகளுடன் மதுரை மேயர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சி மேயர், அதிகாரிகள் தன்னை திட்டமிட்டு புறக்கணிப்பதாக துணை மேயர் நாகராஜன் நேற்று மாநகராட்சி கூட்டத்தில் வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளதால், இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க துணை மேயருக்கான அதிகாரம் என்ன என்று மதுரை மேயர் இந்திராணி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதால் திமுக கூட்டணி கட்சிக்குள்ளேயே மோதல் வெடித்துள்ளது.
மதுரை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த இந்திராணியும், துணை மேயராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாகராஜனும் உள்ளனர். ஆரம்பத்தில் மேயரும், துணை மேயரும் ஒற்றுமையுடனே செயல்பட்டனர். நாளடைவையில் மாநகராட்சி ஆய்வுக்கூட்டங்கள், ஆலோசனைக் கூட்டங்களில் இருவரும் ஒன்றாக பங்கேற்பது குறைந்தது. அதற்கு துணை மேயர், ”மாநகராட்சி அதிகாரிகள் முறையாக தன்னை அழைப்பதில்லை, தகவல்கள் தருவதில்லை,” என்று குற்றம்சாட்டி வந்தார். அதனால், மேயருக்கும், துணை மேயருக்கும் இடையே திரைமறைவு மோதல் நீடித்து வந்தது. வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுகளுக்கு மேயரும், துணை மேயரும் தனித்தனியாக செல்ல ஆரம்பித்தனர். துணை மேயர் நாகராஜன் கூறும் ஆலோசனைகளுக்கு அதிகாரிகள் காது கொடுத்து கேட்பதில்லை என்று கூறப்படுகிறது.
அதிருப்தியடைந்த துணை மேயர் நாகராஜன், நேற்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர், அதிகாரிகள் மாநகராட்சி நிர்வாகப் பணிகளில் தன்னை திட்டமிட்டே புறக்கணிப்பதாகவும், மாநகராட்சி நிர்வாகம் மோசமடைந்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். அவரது இந்தப் பேச்சை சற்றும் எதிர்பாராத மேயர் தரப்பினர் அதிர்ச்சியடைந்தனர். ஏற்கெனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டங்களில் பல்வேறு விமர்சனங்களை மாநகராட்சி மீது வைத்து வந்த நிலையில், தற்போது அதே கட்சியை சேர்ந்த துணை மேயர் நாகராஜனும் கூட்டணி கட்சி மேயர் மீதும், அவரது தலைமையிலான நிர்வாகம் மீது வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ள இச்சம்பவம் மதுரை மாநகரில் இரு கட்சிகளுக்கும் இடையான கூட்டணியில் விரிசலை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது.
இது குறித்து மேயர் இந்திராணி தரப்பினரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: “மாநகராட்சி நிர்வாக சட்ட விதிமுறைகளின்படி (Municipal Corporation Act) துணை மேயருக்கு சில அதிகாரங்கள் உள்ளன. ஆனால், அவர் அவரது ஆதிகார வரம்பை மீறி உரிமைகளை எதிர்பார்க்கிறார். மாநகராட்சி சட்டப் பிரிவு 41-ன்படி மேயர் பதவி காலியாக இருக்கும்போது புதிய மேயர் தேர்வு வரை, துணை மேயர் அலுவலக நிர்வாகம் செய்யலாம். மேயர் 15 நாட்களுக்கு மாநகராட்சியில் இல்லாவிட்டாலும், வேலை திறன் அற்றவராக போய்விட்டாலும் சூழ்நிலையை பொறுத்து மேயர் திரும்பி வரும் வரை அல்லது அவர் இழந்த திறனை மீண்டும் மேயர் பெறும் வரை அவரது அனுமதியின் பேரில் துணை மேயர் அலுவல நிர்வாகத்தை செய்யலாம். மேயர் தம்முடைய அலுவல்கள் எதையும் எழுத்து பூர்வமாக பரிந்துரை செய்து பிரித்து கொடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் அப்பணியை பார்க்கலாம்.
சட்டம் என்ன சொல்கிறதோ அதைத்தான் சலுகையாகவும், உரிமையாகவும் அவர் கேட்டு பெறலாம். துணை மேயருக்கு எந்த அலுவலகப் பணியும் இல்லை. அவர் விருப்பப்பட்டால் எந்தத் தகவலையும் கேட்டு பெற்றுக் கொள்ளலாம். அவருக்கு கோப்புகளில் கையெழுத்து போடும் அதிகாரம் எதுவும் கிடையாது. சட்டத்தில் இடமே இல்லாத விஷயங்களை சபை நாகரீகத்தை மீறி மாமன்றத்தில் பதிவு செய்வது எப்படி சரியாக வரும்.
நாங்கள் துணை மேயருக்கான கவுரம் வழங்கியிருக்கிறோம். அவரை அனைத்து ஆலோசனை கூட்டங்களுக்கும் அழைத்து பல்வேறு ஆலோசனை பெற்றும் கொண்டிருக்கிறோம். இப்படியிருந்தும் ஏன் அவர் அப்படி புரிதல் இல்லாமல் பேசினார் என்பது தெரியவில்லை” என்று அவர்கள் தெரிவித்தனர்.
துணை மேயர் நாகராஜனிடம், இதுகுறித்து கேட்டபோது, ”நிர்வாக வாரியாக நடக்கும் கூட்டங்களுக்கு என்னை அழைப்பதில்லை. என்னை அழைத்தால் என்னுடைய கருத்துகளையும், ஆலோசனைகளையும தெரிவிப்பேன். அதற்கு ஏன் அவர்கள் தயங்குகிறார்கள்” என்றார்.