மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்தவர் வேல்முருகன். நேற்றைய தினம் வேல்முருகன் தன்னுடைய ஃபைபர் படகில், அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், அருண்குமார், மாதவன், கார்த்தி, முருகன் உள்ளிட்டோருடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருக்கிறார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே 44 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் அனைத்து மீன்பிடி உபகரணங்களையும் பறித்துக் கொண்டதுடன், இரும்பு பைப்பால் கொடூரமாகத் தாக்கியிருக்கின்றனர்.
இதில் 6 மீனவர்களும் காயமடைந்தனர். தொடர்ந்து உடலில் ரத்தக்கட்டு ஏற்பட்டதுடன் ஒரு மீனவருக்கு லேசான எலும்பு முறிவும் ஏற்பட்டிருக்கிறது. இன்று கரை திரும்பிய மீனவர்கள் தரங்கம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை மேற்கொண்ட பின்பு, மேல் சிகிச்சைக்காக பொறையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மாவட்ட எஸ்.பி நிஷா ஆகியோர் நேரில் சந்தித்து விவரங்களை கேட்டறிந்து, அவர்களுக்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, “மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள்மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர்மீது வழக்கு பதிவுசெய்ய இந்தியக் கடலோர காவல்படைக்குப் பரிந்துரை செய்திருக்கிறோம். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.