“பாதுகாப்பான, நம்பகமான டிஜிட்டல் கட்டமைப்புகளை இந்தியா உருவாக்கியுள்ளது” என ஜி 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் முதலாவது கூட்டத்தில் காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். அப்போது பிரதமர் பேசுகையில், இன்று உலகளவில் எதிர்கொள்ளப்படும் சவால்களை சுட்டிக் காட்டிய அவர், “மோசமான பொருளாதார சூழல்களை உலகம் சந்தித்து வரும் வேளையில், உலகளாவிய நிதி மற்றும் பொருளாதார தலைமைத்துவத்தின் பிரதிநிதியாக கூட்டத்தின் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தில் அதன் தாக்கங்கள், அதிகரித்து வரும் புவி- அரசியல் நிகழ்வுகள், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் இடையூறுகள், விலையேற்றம், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு உட்பட பல விஷயங்கள, உலகின் முன்னணி பொருளாதாரங்கள் மற்றும் நிதி அமைப்புமுறைகளின் பாதுகாவலர்களை சார்ந்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து இந்திய நுகர்வோர் மற்றும் தயாரிப்பாளர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. உலக அளவில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக கூடிய மக்கள் குறித்து விவாதங்களில் உறுப்பினர்கள் கவனம் செலுத்தவும். அம்மக்களை உள்ளடக்கிய திட்டத்தை உருவாக்குவதன் வாயிலாக மட்டுமே, உலகின் நம்பிக்கையையும் சர்வதேச பொருளாதார தலைமைத்துவத்தையும் மீண்டும் கொண்டு வர இயலும். “ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்” என்ற தொலைநோக்குப் பார்வையை இந்திய ஜி20 தலைமைத்துவத்தின் கருப்பொருள் ஊக்குவிக்கிறது. உலக மக்கள் தொகை 8 பில்லியனைக் கடந்துள்ள போதும், நிலையான வளர்ச்சி இலக்குகளின் முன்னேற்றம், தொய்வடைகிறது” என்றார்.
தொடர்ந்து, நிதித் துறையில் அதிகரித்து வரும் தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தை சுட்டிக் காட்டிய பிரதமர், பெருந்தொற்று காலத்தில் தொடர்பு அல்லாத மற்றும் சீரான பரிவர்த்தனைகளை டிஜிட்டல் கட்டணமுறைகள் வழங்கியதை குறிப்பிட்டார். கடந்த சில ஆண்டுகளில் தனது டிஜிட்டல் கட்டண சூழலியலில் மிகுந்த பாதுகாப்பான, நம்பகத்தன்மை வாய்ந்த மற்றும் அதீத செயல்திறன் கொண்ட பொது டிஜிட்டல் உள்கட்டமைப்பை இந்தியா உருவாக்கியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். “டிஜிட்டல் கட்டணச் சூழலியல் விலையில்லா பொது நல சொத்தாக உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறிய பிரதமர், “நாட்டில் நிதி உள்ளடக்கம் மற்றும் எளிதான வாழ்க்கைமுறையை இது பெருவாரியாக மாற்றி அமைத்துள்ளது” என்றார்.
தொடர்ந்து இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் போது உருவாக்கப்பட்டுள்ள புதிய அமைப்புமுறை பற்றி பேசிய அவர், “யு.பி.ஐ என்ற இந்தியாவின் தலைசிறந்த டிஜிட்டல் கட்டணத் தளத்தை ஜி20 விருந்தினர்கள் பயன்படுத்த இது வழிவகை செய்கிறது. யு.பி.ஐ போன்ற உதாரணங்கள் ஏராளமான இதர நாடுகளுக்கும் முன்மாதிரியாக செயல்படலாம். எங்களது அனுபவங்களை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைவதோடு, இதன் உந்துசக்தியாக ஜி20 செயல்படக்கூடும்” என்று கூறி தமது உரையை நிறைவு செய்தார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM