தமிழகத்தில் நாளுக்கு நாள் வடமாநில தொழிலாளர்களின் வரவு அதிகரித்து வருகிறது. நாள்தோறும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். வடமாநில தொழிலாளர்களால் தமிழர்களின் வேலை பறிக்கப்படுவதாக வலதுசாரி தமிழ் அமைப்புகள் கூறிவருகின்றன. அதேபோல் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நாம் தமிழர் கட்சி தலைவர்
சீமான்
உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தான் ஆட்சிக்கு வந்தால் வடமாநில தொழிலாளர்கள் மீது கஞ்சா கேஸ், ரேப் கேஸ் போடுவேன் என சீமான் பொது வெளியில் பேசியது சர்ச்சைக்குள்ளானது. அதேபோல் சொந்த மாநிலத்தில் பிழைப்பு இல்லாமல் முன்னேறிய தமிழகத்திற்கு வரும் கூலித் தொழிலாளர்கள் மீது வன்மம் கொள்ளக்கூடாது என இடதுசாரி அமைப்புகள் தெரிவித்து வருகின்றன. மேலும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிரான இவ்வெறுப்புப் பிரச்சாரங்கள் திட்டமிட்டே பரப்பப்பட்டு வருகிறது என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் தமிழ் தொழிலாரை வடமாநில தொழிலாளர் கூட்டமாக சேர்ந்து விரட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் ஓடும் ரயிலில் வடமாநில தொழிலாளரை தமிழகத்தைச் சேர்ந்த நபர் கொச்சையான வார்த்தைகளால் திட்டி தாக்கும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து விழுப்புரத்தைச் சேர்ந்த மகிமை தாஸ் என்ற நபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் தெற்கு ரயில்வேயில் வேண்டும் என்றே வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களை ஒன்றிய அரசு பணியில் அமர்த்துவதாக குற்றச்சாட்டு உள்ளது. தமிழ் தெரியாத வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களால் பயணிகள் பாதிக்கப்படுவதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்தநிலையில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்க வந்த பயணியிடம், வடமாநிலத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் இந்தியில் தரக்குறைவாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து மும்பை ,டெல்லி, ஜம்மு காஷ்மீர், குஜராத் கேரளா, சென்னை உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள எட்டு டிக்கெட் கவுண்டர்களில் 3 கவுண்டர்களில் மட்டுமே ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் இருவர் வட மாநிலத்தவர்களாக இருப்பதும் பயணிகளுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
நீங்க என்ன பத்திரிக்கை…?அமைச்சர் கேள்வியால் சலசலப்பு…!
குறிப்பாக டிக்கெட் அல்லது முன்பதிவு குறித்த சந்தேகங்களுக்கு வட மாநில ஊழியர்களால் சரியான பதிலை சொல்ல முடிவதில்லை. இதனால் ஊழியர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இது போன்ற வட மாநில ஊழியர்கள் பயணிகளிடம் மரியாதையை கடைபிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் டிக்கெட் கவுண்டரில் இருக்கும் வடமாநில ஊழியர் ஒருவர், பெண் பயணியிடம் இந்தியில் தரக்குறைவாக பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. எனவே ரயில்வே துறை அதிகாரிகள் வட மாநில ஊழியர்களை பணியமர்த்துவதை தவிர்த்தால் இது போன்ற பிரச்சினைகளுக்கு இடம் இருக்காது என பயணிகள் தெரிவிக்கின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.