வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பூரண அனுசரணையுடன், இஸ்ரேலில் செவிலியர் Nurse வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி, அரச இலச்சினை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அரச இலச்சினை என்பவற்றை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட போலி ஆவணங்களை, இளைஞர்களுக்கு வழங்கி, இளைஞர்களை தவறாக வழிநடத்திய ஒருவர் பணியகத்தின் அதிகாரிகளினால் நேற்று முன்தினம் (22) பத்தரமுல்ல தியதமுல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர், இஸ்ரேலில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி ஒருவரிடம் தலா 4 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொள்வதாக, பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, புலனாய்வு அதிகாரிகள் முறைப்பாட்டாளருடன் சென்று சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
குளியாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, அத்துரிகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த மற்றுமொருவர் இந்த மோசடிக்கு உதவியுள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய புலனாய்வு அதிகாரிகள் மற்றைய நபரை தியத உயன வளாகத்திற்கு வரவழைத்து கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவங்கள் தரவிறக்கம் செய்யப்பட்டு, அதில் அரச இலச்சினை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இலச்சினை என்பவற்றை உள்ளடக்கி இந்த மோசடியை மேற்கொண்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது. அந்த இடத்தில் இருந்து போலியாக தயாரிக்கப்பட்ட 5 விண்ணப்பங்கள் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளன.
அதன்படி, இருவரையும் கைது செய்து, கடுவெல நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய பின்னர், இருவரையும் 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் மட்டுமே இலங்கையர்களை Nurse இஸ்ரேலில் செவிலியர் வேலைவாய்ப்புக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது. இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க, பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான http://www.slbfe.lk ஊடாகவும் மற்றும் இஸ்ரேலுக்கான Home base caregivers for Israel என்ற இணைப்பின் மூலமும் ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும்.
எனவே, எக்காரணம் கொண்டும், இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்களை பெறுவதற்கு, வெளியாரிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டாம். அவ்வாறு அவ்வேலை வாய்ப்பைப் பெறுவதற்கு எவருக்கேனும் பணம் வழங்கி மோசடியில் சிக்க வேண்டமாம். இதுபோன்று மோசடி செய்பவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால், பணியகத்தின் 24 மணி நேர தகவல் மையத்தின் 1989 என்ற இலக்கத்தை அல்லது 0112864241, 011864123 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக விசேட புலனாய்வுப் பிரிவிற்கு தகவல்களை தெரிவிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொள்வதாகவும் பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.