மும்பை: விவசாயி ஒருவர் தனது நிலத்தில் விளைவித்த 512 கிலோ வெங்காயத்தை 70 கிமீ பயணம் செய்து எடுத்து விற்றதில் வெறும் ரூ.2க்கு விற்றிருக்கும் பரிதாப நிலை மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. இதுபோல விவசாயிகளுக்கு கண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை வீழ்ச்சிக்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். மகாராஷ்டிராவில் சோலாபூர் மாவட்டம் பர்ஷி தாலுகா பர்கோன் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திர துகாராம் சவான் (58). விவசாயி. இவர் தனது நிலத்தில் விளைந்த 512 கிலோ பெரிய வெங்காயத்தை மூட்டையாக கட்டிக் கொண்டு, 70 கிமீ தூரத்தில் சோலாபூரில் உள்ள வேளாண் விளைபொருள் விற்பனை மண்டிக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், அங்கு துகாராம் சவானுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவரது வெங்காயம் கிலோ ரூ.1 மட்டுமே ஏலம் போனது. அதிலும் கொடுமை என்னவென்றால், 512 கிலோ வெங்காயம் ரூ.512. இதில், வெங்காய மூட்டைகளை ஏற்றி இறக்க மற்றும் போக்குவரத்து கூலி ரூ.509.50. அதுபோக மீதம் துகாராம் சாவனுக்கு கிடைத்த வருமானம் வெறும் ரூ.2.49 மட்டுமே. இதிலும் விற்பனை மையங்கள் (ஏபிஎம்சி) செக் போட்டு தருவதுதான் வழக்கம். செக்கில் பைசாவுக்கு மதிப்பில்லை. இதனால் துகாராம் சவானுக்கு ரூ.2 வங்கி செக் போட்டு தரப்பட்டுள்ளது. அதுவும் 15 நாட்கள் கழித்து தான் எடுக்க முடியும். நாடு முழுவதும் மகாராஷ்டிராவில் இருந்து அதிகளவில் வெங்காயம் விநியோகம் செய்யப்படுகிறது.
அப்படியிருக்கையில் துகாராம் சாவன் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு ஒரு கிலோ வெங்காயத்திற்கு ரூ.20 லாபம் கிடைத்தது. இப்போது பயங்கர நஷ்டம். கடந்த 3-4 ஆண்டுகளாகவே விதை, உரம், பூச்சிக் கொல்லி மருந்துகளின் விலை அதிகரிப்பதால் 500 கிலோ வெங்காயம் விளைவிக்க ரூ.40,000 செலவானது. விளைச்சலுக்காக செலவிட்ட பணத்தை மொத்தமும் இழந்து விட்டேன்’’ என்றார். இதுதான் மகாராஷ்டிராவில் பெரும்பாலான வெங்காய விவசாயிகளின் கண்ணீர் கதையாக உள்ளது. இதற்கு காரணம், அதிகப்படியான விளைச்சலே என்கின்றனர் விவசாயிகள். கடந்த டிசம்பரில் மகாராஷ்டிராவின் லசல்கான் சந்தைக்கு 15 ஆயிரம் குவிண்டால் வெங்காயம் வந்த நிலையில், தற்போது ஒரு நாளுக்கு 30,000 குவிண்டால் வெங்காயம் குவிகிறது. இதன் காரணமாக டிசம்பரில் ஒரு குவிண்டால் வெங்காயம் விலை ரூ.1850 இருந்த நிலையில் தற்போது ரூ.550 ஆக சரிந்துள்ளது.
விவசாயிகள் கூறுகையில், ‘‘இதே நிலை தொடர்ந்தால் விவசாயிகள் எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியாமல் இருக்க முடியும். ஒன்றிய அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்துகிறோம் என விவசாயிகள் வயிற்றில் அடிப்பதில் என்ன நியாயம்? தேவைபோக மீதமுள்ள வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும். விவசாயிகளிடம் இருந்தே அரசே நேரடியாக அதிகப்படியான வெங்காயத்தை கொள்முதல் செய்து, மொத்த விற்பனை விலையை நிலைப்படுத்த வேண்டும். இதுதொடர்பாக அரசுக்கும் கடிதம் அனுப்பி உள்ளோம். இன்னும் 2 வாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம்’’ என எச்சரித்துள்ளனர்.
* வீழ்ச்சி அடைந்த விலை நிலவரம்
மகாராஷ்டிராவின் லசல்கான் விற்பனை மையத்தில் கடந்த ஓராண்டாக விற்பனையான ஒரு குவிண்டால் வெங்காயத்தின் விலை நிலவரம்:
தேதி விலை
செப்.21, 2022 ரூ.1,100
அக்.21, 2022 ரூ.1,860
நவ. 4, 2022 ரூ.2,550
டிச.26, 2022 ரூ.1,850
ஜன.9, 2023 ரூ.1,501
பிப்.9, 2023 ரூ.1,000
பிப். 23, 2023 ரூ.550