தமிழ்நாட்டில் சாதியை ஒழித்து விட்டதாக திராவிட கட்சிகள் கூறி வந்தாலும் சாதி பார்த்து தான் சீட் கொடுக்கும் நிலை இன்றளவும் இருக்கிறது. அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால்
எடப்பாடி பழனிசாமி
வசம் அதிமுக சென்றுவிட்டது. இதனால் முக்குலத்தோர் வாக்கு வங்கி அதிமுகவிற்கு இனியும் கிடைக்குமா? என்ற சந்தேகம் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதன் பின்னணியில் சில விஷயங்களை ஆராய வேண்டியுள்ளது.
முக்குலத்தோர் வாக்கு வங்கி
மேலும் முக்குலத்தோர் வாக்குகளை கவர எடப்பாடி எடுத்துள்ள ஸ்மார்ட் மூவ் வெற்றி பெறுமா? என்பதையும் கவனிக்க வேண்டும். முக்குலத்தோர், அதிமுக இடையிலான உறவு கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே நீடித்து வருகிறது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தேர்வு செய்து கொடுத்த மாயத்தேவர் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர். இவர் திண்டுக்கல் மக்களவை தொகுதி இடைத்தேர்தல் மூலம் அதிமுகவிற்கு முதல் வெற்றியை பெற்று தந்தார்.
சசிகலா உடன் நட்பு
அப்போதே முக்குலத்தோர் வாக்கு வங்கிக்கு அச்சாரம் போடப்பட்டு விட்டது. இது ஜெயலலிதா – சசிகலா நட்பின் மூலம் அடுத்தகட்டத்திற்கு சென்றது. சசிகலா முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த பலரை அமைச்சரவை பட்டியலில் இடம்பெற வைத்தார். அதுமட்டுமின்றி ஜெயலலிதாவை நிழலாக சசிகலா தொடர்ந்தார். இது முக்குலத்தோர் சமூகத்தினரை அதிமுகவை தங்களுக்கான கட்சியாக பார்க்க வைத்தது.
முதல்வராக ஓ.பன்னீர்செல்வம்
இதன் தொடர்ச்சியாக தேவர் சமுதாயத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வத்தை முதல்முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தார். இந்த பதவி குறுகிய காலமே நீடித்தாலும் அந்த சமூகத்தினரை அதிமுகவின் விசுவாசிகளாக மாற வைத்தது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் ஆதிக்கத்தால் டிடிவி தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இது முக்குலத்தோர் சமூக மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.
வன்னியர் உள் இடஒதுக்கீடு
மேலும் வன்னியருக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டால் அதிகம் பாதிக்கப்பட்டது எம்.பி.சி பிரிவில் பெரும்பான்மையாக இருந்த முக்குலத்தோர் சமூகம் தான். இவை அனைத்தும் எடப்பாடி தலைமையிலான அதிமுக மீது வெறுப்பை விதைத்தது. வரும் தேர்தலில் அதிமுகவை முக்குலத்தோர் சமூகத்தினர் மற்றும் அந்த சமூகம் சார்ந்த அமைப்புகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்.பி.உதயகுமார் துணைத்தலைவர்
ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை விட்டு ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிய பிறகு அந்த சமூகத்தின் வெறுப்பை சம்பாதிக்கும் சூழல் வரும் என்பதை எடப்பாடி ஏற்கனவே உணர்ந்து வைத்திருந்தார். எனவே தான் ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆக்கினார். தற்போது அதிமுகவின் முகமாக எடப்பாடிக்கு அடுத்த இடத்தில் ஆர்.பி.உதயகுமார் தான் உள்ளார்.
எடப்பாடி சீக்ரெட் உத்தரவு
மேலும் செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா போன்றோர் அந்த கட்சியின் முக்கிய முகங்களாக இருப்பதோடு தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களுக்கு கட்சியை தாண்டி ஊடகங்களிலும் அதிக வெளிச்சம் தரப்பட வேண்டும் என எடப்பாடி தரப்பில் ஒரு சீக்ரெட் உத்தரவு போடப்பட்டுள்ளதாக ரத்தத்தின் ரத்தங்கள் கூறுகின்றனர். குறிப்பாக தேர்தல் நேரத்தில் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த லெட்டர் பேட் கட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.