முல்லைப்பெரியாறு அணையில் `சீஸ்மோகிராப்' பொருத்தும் பணி – விவசாய சங்கம் எதிர்ப்பு

​தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ​தென் தமிழகத்தின் ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாய ஆதாரமாகவும் இருப்பது முல்லைப்பெரியாறு அணை. இந்த அணை பலவீனமாக இருக்கிறது என கேரளா அரசு குற்றம்சாட்டிவந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் மூலம் அணையின் உறுதித்தன்மை நிரூபிக்கப்பட்டது.​ ​அதன் பிறகும் கேரள அரசு தொடர்ந்து நிலநடுக்கம், நில அதிர்வால் அணைக்கு பாதிப்பு இருக்கிறது எனக் குற்றம்சாட்டிவந்தது. இந்த நிலையில்,​ ​டெல்லியில் நடைபெற்ற மேற்பார்வைக்குழுவின் கூட்டத்தில் முல்லைப்பெரியாறு அணையில் நில அதிர்வு கண்காணிப்புக் கருவிகள் பொருத்துவது குறித்து கேரளா அரசு கோரிக்கைவைத்தது.

நில நடுக்க அளவீடு கருவி பொருத்தும் பணி

​இந்த நிலையில் நில அதிர்வு, நிலநடுக்கத்தை அளவிடும் சீஸ்மோகிராப் மற்றும் ​அணையின் மேற்பகுதியில் நில அதிர்வு ஏற்படுவதைக் கண்டறியும் ​ஆக்சலரோகிராப் கருவிகளை வாங்க ரூபாய் 99.95 லட்சம் நிதியினை தமிழக பொதுப்பணித்துறையினருக்கு ஒதுக்கீடு செய்தனர்.​ ​கருவிகளைப் பொருத்தும் பணியைச் செய்து முடிக்க ஹைதராபாத்தைச் சேர்ந்த மத்திய அரசின் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுமதி வழங்கியிருக்கின்றனர்.

​சீனியர் விஞ்ஞானி விஜயராகவன் தலைமையில் அணைப் பகுதியில்  ​சீஸ்மோகிராப், ஆக்சலோகிராப் கருவிகளை அணையின் மேற்பகுதி, சுரங்கப் பகுதி, பெரியாறு அணை கேம்ப் பகுதியில் பொருத்தும் பணியில் தமிழக பொதுப்பணித்துறையினர் செய்தனர்.​ ​இதை கேரள நீர்பாசனத்துறையின் பொறியாளர்​ குழுவினர் பார்வையிட்டனர்.

இதற்கிடையே முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் நிலநடுக்கத்தை அளவிடும் கருவிகளைப் பொருத்துவதற்கு ​தமிழக விவசாய சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கத்திடம் பேசினோம்.

அன்வர் பாலசிங்கம்

அவர், “நிலநடுக்கம் ஏற்பட்டால் 3.5 ரிக்டர் அளவுகோல் முதல் 4.5 ரிக்டர் அளவுகோலைத் தாங்கும் அளவுக்கு அணை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 125 ஆண்டுகளாக வராத நிலநடுக்கம் இனி வந்துவிடும் எனக் கூறி அணை பலவீனமாக இருக்கிறது என்பதை கேரள அரசு மறைமுறைமாகத் தெரிவிக்கிறது.

முல்லைப்பெரியாறு அணை

ஏற்கெனவே கேரளாவில் அணை குறித்து பொய்ப் பரப்புரைகள் நடந்துவரும் நிலையில், சீஸ்மோகிராப் பொருத்தப்பட்டிருக்கும் செய்தியை மக்களிடையே அச்சமூட்டம் வகையில் கொண்டு செல்வார்கள். இதையெல்லாம் அணைய இடிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் செய்துவருகின்றனர். எனவே, சீஸ்மோகிராப் பொருத்துவதை பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம் முழுமையாக எதிர்க்கிறது” என்றார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.