பொள்ளாச்சி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்தையொட்டிய ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த மக்னா யானை கடந்த 5ம் தேதி பிடிக்கப்பட்டது. 6ம் தேதி கோவை மாவட்டம் டாப்சிலிப், வரகளியாரில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. வனத்துறையினர் கண்காணிப்பில் இருந்த மக்னா யானை, கடந்த 21ம் தேதி தேதி நள்ளிரவில் திடீரென வெளியேறியது. சேத்துமடை, ஆனைமலை, ஆத்துப்பொள்ளாச்சி, கோவிந்தனூர், நடுப்புணி, களத்துபுதூர், கிணத்துக்கடவு வழியாக வந்த யானை 22ம் தேதி கோவை அருகே உள்ள மதுக்கரையை புகுந்து அனைவரையும் கதி கலங்க வைத்தது. 3 நாட்கள் போராட்டத்துக்கு பின் நேற்று முன்தினம் மயக்க ஊசி செலுத்தி மக்னா யானை பிடிக்கப்பட்டது. பின்னர், லாரியில் ஏற்றப்பட்ட யானை பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. நேற்று வால்பாறை மானம்பள்ளி வனத்திற்குள் யானையை வனத்துறையினர் விடுத்தனர். ஏறத்தாழ 20 மணி நேரமாக யானை மயங்கிய நிலையில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.