வாழும்போதே சொர்க்கம் கிடைக்கணுமா? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

சமைப்பது ஒரு கலை .. இல்லை என்று சொல்ல முடியாது ஆனால் சமைத்ததை ரசித்து ருசித்து சாப்பிடுவது என்பதும் அழகான கலை!. சாதம் சப்பாத்தி ,தோசை என்ற நம் வழக்கமான உணவையே சில நாட்களில் ரசித்து ருசித்து நிறைய சாப்பிடுகிறோம் . சில நாட்களிலோ ‘போதும் ‘என்று கொஞ்சத்தோடு கை கழுவி விடுகிறோம். ஏன்? யோசித்துப் பார்த்திருக்கிறோமா ??அந்த சாதத்திலோ, சப்பாத்தியிலோ பிரச்சனை இல்லை.

அதற்கான சைட் டிஷ்லதான் விஷயமே! விதவிதமாக, புது சுவைகளில் சைட்டிஷ் சமைத்துக் கொண்டால் வழக்கமான உணவை கூட விருந்து கணக்காக நம் நாவுக்கு இதம் தரும். உங்கள் உணவு நேரம் எல்லாமே விருந்து நேரமாக அமர்க்களப்பட… உணவை ரசித்து ருசித்து சாப்பிட… நான் பின்பற்றும் சில விஷயங்கள்.

Representational Image

இதற்கெல்லாம் ரூம் போட்டு யோசிக்கக்கூட வேண்டாம். கொஞ்சமே கொஞ்சம் கற்பனை.. கொஞ்சம் ஆசை கொஞ்சம் அன்புடன் சமைக்க… சமைத்ததை (கொஞ்சம் )அதிகமான காதலுடன் பரிமாற ரசித்து ருசித்து சாப்பிடுவர்… வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை!

வெறும் மிளகு ரசம் வைத்தால் கூட அதற்கு தொட்டுக்கொள்ள துவரம் பருப்பு துவையல் அரைத்து தொட்டுக்கொண்டு சாப்பிடும் போது அதன் சுவையே அலாதி.

மணத்தக்காளி வத்தக் குழம்பு செய்யும் போது காய்கறிகளை அளவாக நறுக்கி செய்த புத்தம் புதிதாய் தயிர் ஊற்றி தேங்காய் எண்ணெயில் கடுகு கருவேப்பிலைதாளித்து தேங்காய் எண்ணெய் மினுமினுக்க அவியல்.. மற்றும் சுட்ட அப்பளம் சாப்பிட.. சோறு எவ்வளவு சாப்பிட்டோம் என்று கணக்கே இல்லாமல் சாப்பிடுவோம்.

வெண்பூசணி போட்ட மோர் குழம்பு தொட்டுக்கொள்ள காய்ந்த மிளகாய் அதிகம் சேர்த்த பீட்ரூட் பொரியல் மற்றும் வாழைக்காய் பால் கறி.. ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்… பருப்பு உருண்டை குழம்புக்கு காரசாரமாக தொட்டுக்கொள்ள பீன்ஸ் உசிலி சுவைஅள்ளும்.

Representational Image

தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் ,புளி சாதம் இப்படி கலந்த வகைச் சாதங்களில் இறக்கும் தருவாயில் பொடியாக நறுக்கிய முந்திரியை எண்ணெயில் வறுத்து மேலே தூவி சாப்பிட சுவை இரட்டிப்பாகும். கூடவே வயிற்றுக்கு கெடுதல் செய்யாத ஏதேனும் ஒரு வகை காய்கறியில் கூட்டு.

பொட்டுக்கடலை பொடி, பருப்பு பொடி ,கருவேப்பிலை பொடி, புதினா பொடி ,போன்ற பொடிகளை சூடான சோற்றில் நல்லெண்ணெய் விட்டோ/ நெய் விட்டோ பிசைந்து வாழக்காயை சுடச்சுட வறுத்து சாப்பிட்டு பாருங்கள்.. அட அட அட அட.!. வெங்காய சாம்பார் ,தொட்டுக் கொள்ள உருளை பட்டாணிக் கறி வேறொன்றும் தேவையில்லை.

Representational Image

சுடச்சுட பிஸிபேளாபாத், வெங்காய பச்சடி அப்பளப் பூ சொர்க்கம் பாஸ்… தாளித்த பகளாபாத் தொட்டுக்கொள்ள கிளி மூக்கு மாங்காயை பொடியாக நறுக்கி காரம் போட்டு கடுகு பெருங்காயம் தாளித்து தொட்டுக்கொள்ள…செம.

சரி பகல் மற்றும் இரவு உணவுக்கு வருவோம் (பொதுவான) துணியில் வார்த்த சூடான இட்லிக்கு மல்லி சட்னி அல்லது அம்மியில் அரைத்த காரச்சட்னி வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் என்று பாடலே பாடி விடலாம். மெத்து மெத்து என்ற சப்பாத்தி, தால் மக்கனி அல்லது தேங்காய் ,பெருஞ்சீரகம் அரைத்து விட்ட தக்காளி குழம்பு..

தரமான அரிசியில் செய்த அருமையான இடியாப்பத்துக்கு மாப்பிள்ளை சொதி.. வெள்ளை வெளேரென்று ஆப்பம் ஏலக்காய் மணத்துடன் கூடிய தேங்காய் பால்..

இஞ்சி ,பெருஞ்சீரகம் காய்ந்த மிளகாய் எல்லாம் சரியான விகிதத்தில் சேர்த்த தவளை அடை தொட்டுக்கொள்ள சற்று மிளகாய் தூக்கலாக உளுத்தம் பருப்பு வாசத்துடன் கூடிய இட்லி பொடி (நல்லெண்ணெய் ஊற்றி)..

காய்கறிகளை எல்லாம் கண்ணுக்கே தெரியாமல் பொடியாக நறுக்கி நெய் மற்றும் எண்ணெய் சற்று தாராளமாக ஊற்றி செய்த ரவா கிச்சடிக்கு வெள்ளரிக்காய் அல்லது கேரட் தயிர் பச்சடி… எண்ணெய் குடிக்காத பூரிக்கு, மிதமான காரத்துடன் கூடிய பட்டாணி குருமா.

Representational Image

பொடியாக நறுக்கிய வெங்காயம் , இட்லி பொடி ஆங்காங்கே தூவி சுற்றிலும் எண்ணெய் விட்டு மொறுமொறுப்பா ஊத்தப்பம் ஊற்றி எடுத்து புதினா சட்டினி அல்லது வேர்க்கடலை சட்டினியுடன் பரிமாற சாப்பிட்ட கணக்கே இல்லாமல் சாப்பிடலாம்…. இப்படி எந்த உணவை சாப்பிட்டாலும் சரியான இணையுடன் சேர்த்து ரசித்து ருசித்து சாப்பிட வாழும்போதே சொர்க்கத்தை காணலாம். வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு, சிரமப்பட்டு… இப்படி நிறைய பட்டு பட்டு பட்டு…

வேலைக்குச் சென்று சம்பாதிப்பது எல்லாம் எதற்காக பாஸ்! சந்தோஷமாக மகிழ்ச்சியோடு சாப்பிடத் தானே.. சமைத்த பதார்த்தங்களை அழகாய் உங்கள் வளைக்கரங்களால் பரிமாறுங்கள். ரசித்து ருசித்து சாப்பிடுவர். வீடு ஆனந்த மயமாகும்… வீட்டில் ரொமான்ஸ் ரோஜா பூத்துக் குலுங்கும். வாழ்க்கையில் ரசிப்பதற்கு ஏதேனும் ஒரு விஷயம் கிடைத்துக் கொண்டிருக்கும் வரை வாழ்க்கை அழகுதான். அந்த ரசிப்பு சாப்பாட்டில் இருந்தால்.. வாழ்க்கை அழகாய் மட்டுமல்ல அர்த்தமாகவும் மாறிவிடும்.

என்றென்றும் அன்புடன்

ஆதிரைவேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.