வெள்ளிமலை விமர்சனம்: எதார்த்தமான கிராமத்துப் படமா, சித்த மருத்துவம் குறித்த பிரசாரப் படமா?

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள வெள்ளிமலையின் அடிவாரமான கீழ் வெள்ளிமலை கிராமத்தில், தன் மகள் அஞ்சு கிருஷ்ணாவுடன் வாழ்ந்து வருகிறார் சித்த வைத்தியரான சூப்பர் குட் சுப்பிரமணி. அவரிடம் மருத்துவம் பார்க்க மாட்டோம் என்று அடம்பிடிப்பதோடு, அவர் தயாரிக்கும் மருந்துகளையும் கிண்டல் செய்கிறார்கள் அந்தக் கிராமத்தினர். இந்த அவமானங்களை எல்லாம் பொறுத்துக்கொள்ளும் சுப்பிரமணி, ஒருநாள் இந்தக் கிராம மக்கள் தன்னையும் தன் மருந்துகளின் மதிப்பையும் உணர்வார்கள் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்.

இந்நிலையில், அந்த மலைக் கிராமத்தில் ஒரு புது விதமான நோய் ஒன்று பரவ, மொத்த கிராமத்தினரும் துடிதுடித்துப் போகிறார்கள், சிலர் செத்து மடிகிறார்கள். அத்தருணத்திலும், சுப்பிரமணியின் சித்த மருந்துகளை ஏற்க மறுக்கிறார்கள். அப்படி என்ன அவர்மீது கிராமத்தினருக்குக் கோபம், அந்த நோய் குணமானதா, யாரால் குணமானது, இறுதியில் சுப்பிரமணியைக் கிராமத்து மக்கள் ஏற்றுக்கொண்டார்களா என்பதை எதார்த்தமான கிராமத்தையும் மக்களையும் கொண்டு, சித்த மருத்துவத்தின் பரப்புரை படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஓம் விஜய்.

வெள்ளிமலை விமர்சனம்

நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் மட்டுமே நடித்து வந்த ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி, இந்தப் படத்தில் கதாநாயகன் நிலைக்கு ஈடான முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் பொறுப்புக்கு ஓரளவு நியாயமும் சேர்த்திருக்கிறார். கேலிக் கிண்டல்களுக்கு ஆளாகி வெட்கப்படும் இடங்களிலும், பதிலுக்கு அவர்களைக் கலாய்க்கும் இடங்களிலும், தன் குறும்புத்தனத்தால் ஸ்கோர் செய்கிறார். ஆனால், மற்ற உணர்வுபூர்வமான காட்சிகளில் வெறுமன ‘ஐயோ… அம்மா…’ என அழுவதை மட்டுமே ஒரே வேலையாகச் செய்கிறார். இதனால், முக்கிய தருணங்களில் அவரின் வைத்தியர் கதாபாத்திரம் பலவீனமடைகிறது.

வைத்தியரின் மகளாக வரும் அஞ்சு கிருஷ்ணா, தன் நடிப்பால் தனித்து நிற்கிறார். காதல், கோபம், குறும்பு என எல்லா தருணங்களிலும் தன் இயல்பான உடல்மொழியாலும் வசன உச்சரிப்பாலும் ஒரு மலைக் கிராமத்துப் பெண்ணை நம் கண்முன் கொண்டுவருகிறார். அஞ்சு கிருஷ்ணனின் காதலனாக வரும் வீரசுபாஷ் எந்தவொரு அயல் தன்மையும் அற்ற தோற்றத்தில், ஒரு மலைக் கிராமத்தின் துடிப்பான இளைஞனாக வந்து போகிறார். இவர்கள் மட்டுமின்றி, புது முகங்களான மொத்த கிராமத்தினரும் இயல்பாகவே நடித்திருக்கிறார்கள். வசன உச்சரிப்பு, கிராமத்து நையாண்டி என இந்தப் படத்துக்கு உயிர் சேர்த்திருக்கிறார்கள்.

வெள்ளிமலை விமர்சனம்

ஒரு பின்கதையோடு தொடங்கும் முதற்பாதி, மலைக் கிராமத்தின் அழகு, அம்மக்களின் வாழ்க்கை என ஒவ்வொன்றையும் நிதானமாகச் சொல்லியபடி நகர்கிறது. சித்த வைத்தியர் சுப்பிரமணிக்கும் அந்தக் கிராமத்திற்குமான உறவு, கிராமத்தின் எள்ளல் மொழியில் சிறுசிறு காட்சிகளாக விளக்கப்படுகிறது. பயில்வான், கிராமத்து இளைஞர்கள், பொக்கை வாய் அப்பத்தாக்கள் என எதார்த்தமான கதாபாத்திரங்கள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. ஆனால், சிறிது நேரத்திலேயே இந்த எதார்த்தத்தன்மை மறைந்து, சித்த வைத்தியத்தின் பிரசாரத் தொகுப்பாகப் படம் மாறிவிடுகிறது.

இரண்டாம் பாதியில் ரசிக்கும்படியான காட்சிகள் இல்லாததும், இருக்கும் காட்சிகள் எல்லாம் நம்பகத்தன்மையற்று இருப்பதும், படத்திலிருந்து நம்மை விலக வைக்கிறது. மருந்தே கண்டுபிடிக்க முடியாத ஒரு கோர நோய்க்கு, வெள்ளிமலையில் மருந்து தேடச் செல்லும் காட்டுத்தொகுப்பை எந்தப் பொறுப்பும் இல்லாமல், விளையாட்டுப் போக்காக எழுதியிருக்கிறார் இயக்குநர். ஒரு நேர்க்கோட்டில் செல்லாமல் தன் இஷ்டத்துக்குச் செல்லும் இரண்டாம் பாதியில், ஆங்காங்கே ப்ரேக் அடித்து, நவீன மருத்துவத்தைத் திட்டி, சித்த வைத்தியத்தைப் புகழும் காட்சிகளால் நிரப்பியிருக்கிறார் இயக்குநர்.

ஒருகட்டத்தில், சித்த வைத்தியத்திலிருந்து விலகி, சித்தர் மகிமை, சித்தர் வழிபாடு, சிவ வழிபாடு என ஆன்மிகத்தின் பக்கமும் வண்டியைத் திருப்பியிருக்கிறார்கள். வலிந்து திணிக்கப்பட்ட மென்சோக காட்சிகள் கூடுதலாக அயர்ச்சியை மட்டுமே தருகின்றன.

வெள்ளிமலை விமர்சனம்

ஒளிப்பதிவில் மணிபெருமாளும், இசையில் என்.ஆர்.ரகுநந்தனும் கூட்டணிப் போட்டு அசத்தியிருக்கிறார்கள். இருவரும் பிரமாண்டங்களைத் திணிக்காமல், ஒரு சாதாரண கிராமத்திற்குத் தேவையான அமைதியை தங்கள் ஒளிப்பதிவாலும், பின்னணி இசையாலும் வழங்கியிருக்கிறார்கள். பாடல்களால் தொந்தரவில்லை என்றாலும், அவற்றில் வரும் மேற்கத்தியக் குரலால் அந்நியத்தன்மை துறுத்திக்கொண்டு தெரிகிறது. சதீஷ் சூர்யாவின் ஆர்ப்பாட்டமில்லாத படத்தொகுப்பு, படத்துக்குத் தனி அழகைச் சேர்த்திருக்கிறது. ஒலிப்பதிவிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

நவீன மருத்துவமானது ஒட்டுமொத்த மனித சமூக வளர்ச்சியில் ஏற்படுத்திய ஆரோக்கியமான தாக்கத்தைப் பற்றிப் பேசாமல், நவீன மருத்துவத்தையும் சித்த/நாட்டு மருத்துவத்தையும் எதிரெதிர் அணிகளாகச் சித்திரிக்க முயன்றிருக்கிறார் இயக்குநர். தற்போதைய அறிவியல் வளர்ச்சி நிலையில், நவீன மருத்துவம் என்பது அடிப்படை சுகாதாரத்தின் ஓர் அங்கமாக மாறியுள்ளது. அப்படிப்பட்ட அடிப்படைச் சுகாதாரம் கடைக்கோடியில் இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் சென்று சேர வேண்டும் என்று நினைப்பதே சமூகத்தை முன்னோக்கி இழுக்கும் கருத்து. மாறாக, நவீன மருத்துவத்தின் மீது ஆதாரங்களற்ற ஒவ்வாமையைப் பரப்ப முயல்வது, இயக்குநரின் போதாமையையே காட்டுகிறது.

வெள்ளிமலை விமர்சனம்

சித்த/நாட்டு மருத்துவத்தின் மகத்துவத்தை ஒரு மலைக் கிராமத்தின் பின்னணியைக் கொண்டு சொல்ல முயன்றது பாராட்டுக்குரியதுதான் என்றாலும், அதை எதார்த்தமான ஒரு திரைக்கதையோட்டத்தில் பதிவு செய்யாமல், வெறும் வாட்ஸ்அப் பார்வேர்டு மெசேஜ்கள் போல ஆங்காங்கே திணித்ததாலும், சித்த வைத்தியத்தை ஆன்மிக சாகசமாக முன்னிறுத்தியதாலும், `வெள்ளிமலை’ ஒரு பெரிய `வாட்ஸ்அப் ஃபார்வேர்டு மலை’ ஆகிப்போகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.