புதுடெல்லி: வேங்கைவயல் சம்பவம் குறித்து சிபிஐ அல்லது ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது டிச.26-ம் தேதி தெரியவந்தது. அன்றிலிருந்து அந்தக் குடிநீர்த் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, மாற்றுத் தொட்டியில் இருந்து விநியோகம் செய்யப்பட்டது.
மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதுகுறித்து ஏடிஎஸ்பி தலைமையில் 11 பேரை உள்ளடக்கிய விசாரணைக் குழு விசாரித்து வந்தது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 85 சாட்சிகளிடம் விசாரணை மேற் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும், தமிழக அரசின் சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவினர் வேங்கைவயலில் நேரில் ஆய்வு செய்துள்ளது.
இது குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இச்சம்பவத்தில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வி.மார்க்ஸ் ரவீந்திரன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம் குறித்து சிபிஐ அல்லது ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இந்த சம்பவத்தை தடுக்கத் தவறிய அதிகாரிகள், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கோரியுள்ளார்.