109 வயதான பாம்பன் ரயில் பாலத்துக்கு பிரியாவிடை: மீண்டும் எப்போது தொடங்கும் ரயில் சேவை?

பயணிகள் நலன் கருதி 109 வயதான பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
ராமேஸ்வரம் அடுத்துள்ள 109 வயதான பாம்பன் பழைய தூக்குப்பாலத்தில் ரயில் போக்குவரத்து திடீரென நிறுத்தப்பட்டதால் ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் மீனவ மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். உடனடியாக பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் சேவையை துவக்க வேண்டும் என வலுவான கோரிக்கை எழுந்துள்ளது.
image
தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயங்களில் ஒன்று பாம்பன் ரயில் பாலம். இந்த ரயில் பாலம், நிலபரப்பையும் ராமேஸ்வரம் தீவையும் இணைப்பதில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. இது இந்தியாவின் முதல் கடல் பாலமாகும். சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இப்பாலம் இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. பாம்பன் ரயில் பாலத்தின் நடுவே பெரிய கப்பல்கள் சென்று வருவதற்கு ஏற்றவாறு பாலத்தின் நடுவில் கத்திரி வடிவ தூக்குப்பாலம் வடிவமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.
தொடக்கத்தில் ரயில்கள் சென்று வருவதற்கு ஏற்றவாறு குறுகிய ரயில் பாதைகளே கட்டப்பட்டது. பின்னர் 2007 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே பாம்பன் ரயில் பாலத்தை புதுப்பித்து அகல ரயில் பாதையாக அதை மாற்றியது. இப்படி பல மாற்றங்களை பெற்று, இன்று 110வது ஆண்டில் பாம்பன் பாலம் அடியெடுத்து வைத்துள்ளது. தொடக்க காலத்தில் இப்பாலத்துக்காக ஆங்கிலேயர்கள் (1854ல்) 80 அடி அகலம், 14 அடி ஆழம், 4,400 அடி நீளத்திற்கு கால்வாய் வெட்டினர். அந்த வழியாக 200 டன் எடையுள்ள கப்பல்கள், சிறிய ரக போர் கப்பல்கள் சென்று வந்தன. பின் 1876ல் ஆங்கிலேயர்கள், இந்தியா – இலங்கை இடையே போக்குவரத்திற்கான இணைப்பை ஏற்படுத்த முடிவு செய்தனர். அதன்படி பாம்பன் கடலின் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் பாலம் அமைத்து ரயில் போக்குவரத்து ஏற்படுத்த திட்டமிட்டனர். இதற்காக ஜெனரல் மன்றோ என்பவரால் ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால் அத்திட்டம் ஆய்வு நிலையில் கைவிடப்பட்டது.
image
இறுதியாக கீழே கப்பல், மேலே ரயில் செல்லும் வகையில் 1899 ல் ‘டபுள் லீப் கேண்டிலிவர் பிரிட்ஜ்’ பாலம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக 1902ல் ஆங்கிலேய அரசால் முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் 1902 முதல் பாலம் கட்டுவதற்கு அனைத்து பொருட்களும் இங்கிலாந்தில் இருந்து கப்பல்கள் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. குஜராத்தை சேர்ந்த கட்ஜ்கரோலி குடும்பத்தார் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டனர். இவர்களால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தடைகளை கடந்து கடலுக்குள் 144 தூண்களுடன் பாம்பன் பாலம் அமைக்கப்பட்டு, 1913ல் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. 1914 பிப்ரவரி 24ல் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
இந்நிலையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 22ந் தேதி இரவு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் பாம்பன் பாலத்துக்கு பாலத்தை கடந்து செல்லும்போது அதிர்வுகள் அதிகம் இருந்ததாக அபாய ஒலி ஒலித்துள்ளது. ரயில் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மறு உத்தரவு வரும் வரை பாம்பன் தூக்குப்பாலம் வழியாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அன்றுமுதல் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில்கள் மற்றும் ராமேஸ்வரம் நோக்கி வரும் ரயில்கள் அனைத்தும் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
image
இடையே தொழில்நுட்பக் கோளாறை சீர் செய்வதற்கு பாம்பன் தூக்குப்பாலம் பொறியாளர்கள் ஆய்வு செய்யும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு தொழில்நுட்பக்கோளாறை சீர் செய்தனர். இருப்பினும் 109 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் பாலத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்தை தொடங்கினால் விபத்துகள் ஏற்படும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு தேதி குறிப்பிடாமல் தென்னக ரயில்வே பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் சேவையை நிறுத்தியது.
நூற்றாண்டு காலமாக பலரை சுமந்து ரயில் சேவையாற்றி வந்த பாம்பன் பாலத்தில் திடீரென ரயில்வே துறை ரயில் சேவையை நிறுத்தியது உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 110 ஆண்டுகள் கம்பீரமாக நிற்கும் பாம்பன் ரயில் பாலத்தில் கடந்த இரண்டு நாட்களாக ரயில் சேவை நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பாம்பன் மக்களிடையே மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
image
மீனவர்கள் பிடிக்கும் மீன்கள் மற்றும் கருவாடு உள்ளிட்டவைகளை ரயில் மூலமாக அண்டை மாவட்டங்களுக்கு அனுப்பி வருவாய் ஈட்டிவந்த நிலையில் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் பாலத்தில் ரயில் சேவை துவங்கத்துடன் பாம்பன் பாலத்தை சுற்றுலாத்தலமாக அரசு அறிவிக்க வேண்டும் என்கின்றனர் மக்கள்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிலர் நம்மிடையே பேசுகையில், “புதிய பாலத்துக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் பழைய ரயில் பாலத்தில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பாலம் கட்டும் வரை, பழைய ரயில் பாலத்தில் விரைவு ரயில்களை இயக்காமல் பயணிகள் ரயில்களை மட்டுமாவது இயக்கி ராமேஸ்வரம் வரக்கூடிய சுற்றுலாப்பயணிகள் மற்றும் மீனவர்களுக்கு  ரயில்வே நிர்வாகம் உதவி செய்யவேண்டும். தமிழகத்திற்கு அடையாளமாக இருக்கக்கூடிய இந்த பாம்பன் தூக்குப்பாலத்தை அப்புறப்படுத்தாமல் நூற்றாண்டு நினைவு சின்னமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும். அதுவே மக்களாகிய எங்களின் கோரிக்கை” என்கின்றனர்.
image
பாம்பன் பழைய பாலத்தில் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து தென்னக ரயில்வே முதன்மை அதிகாரியிடம் புதிய தலைமுறை தொடர்புகொண்டு கேட்டதற்கு பதில் அளித்த அவர், “கடல் அரிப்பின் காரணமாக பாம்பன் பாலத்தின் பல இடங்களில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில் பாலத்தின் உறுதித்தன்மை குறைந்துள்ளது. ஆகவேதான் பயணிகள் நலன் கருதி பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
பாம்பன் பழைய ரயில் பாலம் சுமார் நூற்றாண்டைக் கடந்துள்ளதால் அடிக்கடி தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டு வருகிறது. எனவே பழைய ரயில் பாலம் அருகே புதிய ரயில் பாலம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஜூன் மாதத்தில் புதிய ரயில் பால பணிகள் நிறைவடைந்து அதில் விரைவில் ரயில் சேவை தொடங்கப்பட்டு மீண்டும் மண்டபம் – ராமேஸ்வரம் இடையே ரயில் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாம்பன் ரயில் பாலத்தில் உள்ள தூக்குப்பாலம் அகற்றப்படுவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.