இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் நாளை இந்தியா வரும் நிலையில், 520 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் கூட்டாக 6 நீர்மூழ்கி கப்பல் கட்டும் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள, 16 பழைய நீர்மூழ்கிக் கப்பல்களில் 11 கப்பல்களை மாற்ற இந்தியா முடிவு செய்துள்ளது. இந்திய கடற்படையில் இரண்டு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன.
பல தசாப்தங்களாக அதிக ஆயுதங்கள் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வரும் நிலையில், அதனை மாற்றி, வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து உள்நாட்டில் ராணுவ தளவாடங்களை தயாரிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.
இதன்படி, வெளிநாட்டு நிறுவனம், இந்தியாவில் உள்ள நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து உள்நாட்டில் நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க வேண்டும் என்பதுடன், அதற்கான முக்கிய தொழில்நுட்பங்களையும் வழங்க வேண்டும்.