ChatGPT போன்ற AI-க்கள் டிரெண்டாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில் அத்தகைய செயற்கை நுண்ணறிவை காமெடி கதையில் புகுத்திக் காதலிக்க வைத்தால் என்னவாகும் என்பதுதான் இந்த `சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’.
விஞ்ஞானியான ஷா ரா, முரட்டு சிங்கிள் பசங்களுக்கு ஓர் ஆதரவு வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு ‘சிம்ரன்’ என்ற செயற்கை நுண்ணறிவு கொண்ட செல்போனை உருவாக்குகிறார். சிங்கிள் பசங்களுக்கு உற்றதுணையாக இந்தப் பெண் AI இருக்கும் என்று நம்புகிறார். எதிர்பாராவிதமாக அந்த செல்போன் களவாடப்பட்டு ஒரு மொபைல் கடையில் விற்கப்பட, உணவு டெலிவரி செய்யும் சிவா அதை வாங்கிவிடுகிறார். அந்த ‘சிம்ரன்’ AI-ஆல் அவர் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள், முன்னேற்றங்கள், ஏமாற்றங்கள்தான் படத்தின் கதை.
உணவு டெலிவரி செய்யும் நபராக ‘அகில உலக சூப்பர்ஸ்டார்’ சிவா. சுமாரான காட்சிகள், படு சுமாரான வசனங்கள் என்றாலும் அவரின் பிரத்யேக உடல்மொழி அதை ரசிக்கும்படி செய்து விடுகிறது. ஃபாரின் காரில் உணவு டெலிவரி, டிரோன் மூலம் உணவு டெலிவரி, லூடோ விளையாடி பணம் ஜெயிப்பது என ஒரு சில ஐடியாக்கள் ரகளை ரகம். டப்பிங்கில் பிற்பாடு சேர்க்கப்பட்ட வசனங்கள் போலத் தோன்றினாலும் ஆங்காங்கே வரும் காமெடி பன்ச்சுகள் சிறப்பு.
ஸ்மார்போனுக்குள் இருக்கும் சிம்ரனாக மேகா ஆகாஷ். பக்கம் பக்கமாக வசனங்கள், ஆனால் அவை அனைத்தும் போனுக்குள் இருந்து மட்டுமே என்பதால் அவரின் காட்சிகள் அனைத்தையும் க்ரீன்மேட்டிலேயே முடித்திருக்கிறார்கள் போல! கொஞ்சம்கூட தீவிரத்தன்மை இல்லாத கதாபாத்திரங்கள் நிறைந்த கதையில் சுயமாக யோசிக்கத் தெரிந்த செயற்கை நுண்ணறிவாக ஸ்கோர் செய்கிறார்.
பாதிரியார் காமெடி தவிர, மனோவின் கதாபாத்திரம் எங்குமே ஈர்க்கவில்லை. அதுவும் அவரின் காதல் போர்ஷன்கள் இந்தக் கதைக்குத் தேவையில்லாத ஒன்றாகவே விரிகின்றன. மா.கா.பா.ஆனந்த், ஷா ரா, KPY பாலா, பக்ஸ் இருக்கிறார்கள், ஆனால் காமெடிதான் இல்லை. இவர்களுக்குத் தரப்பட்டிருக்கும் முக்கியத்துவம் அளவுக்குத்தான் நாயகி அஞ்சு குரியனுக்கும் தரப்பட்டிருக்கிறது. மா.கா.பா-வுக்கு ஜோடியாக வரும் திவ்யா கணேஷ் ஒரு சில காட்சிகளில் ஈர்க்கிறார்.
‘எந்திரன்’ சிட்டி ரோபோ காதல் கதையை காமெடி கொண்டு மாற்றங்கள் செய்து, தற்கால இளைஞர்களைக் கவரும்படியான ஒரு கலாட்டா சினிமாவாகக் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் ஷா. அந்த எண்ணத்தை முதல் பாதி ஓரளவு பூர்த்தி செய்திருக்கிறது. சிவாவின் டெலிவரி பரிதாபங்கள், ஷேர் மார்க்கெட் என காமெடிக்காகவே எழுதப்பட்ட காட்சிகள் சிரிக்க வைக்கின்றன. ஆரம்பத்திலேயே இந்தப் படத்தில் லாஜிக் பார்க்கவேண்டாம் என்று சரணடைந்து விட்டதால், லாஜிக் பிழைகளைப் பொறுத்துக் கொள்ளலாம்.
லியோன் ஜேம்ஸின் இசையில் ‘சோறுதான் முக்கியம்’, ‘ஸ்மார்ட்போன் செனோரிட்டா’ பாடல்களும் பின்னணி இசையும் ஓகே ரகம். படு சுமாரான ‘அம்மன்’ படக்காலத்து கிராபிக்ஸ், வழக்கமான கோணங்கள் இந்தப் படத்துக்கு ஆர்தர் A.வில்சன் கேமராவா என்று யோசிக்க வைக்கிறது. பூபதி செல்வராஜின் படத்தொகுப்பு படத்தின் வேகத்தைக் கச்சிதமான மீட்டரில் வைத்திருந்தாலும் கிராபிக்ஸ் காட்சிகள், அதன் செயலாக்கம், டெக்னிக்கலாகப் படத்தை பாஸ் மார்க்கூட பெறவிடாமல் செய்கின்றன.
முதல் பாதியிலிருந்த காமெடி, இரண்டாம் பாதியில் சுத்தமாகக் காணாமல் போகிறது. சிவாவைப் பழிவாங்க மேகா ஆகாஷ் செய்யும் கலாட்டாக்கள் அதீத சீரியல் உணர்வையே தருகின்றன. ஸ்க்ரிப்ட் பேப்பரில் நல்ல காமெடி டிராமாவாகத் தோன்றும் க்ளைமாக்ஸ் காட்சிகளை இன்னும்கூட சிரத்தையுடன் படமாக்கியிருக்கலாம்.
பழைய கதை, அதைவிடப் பழைய காட்சி அமைப்புகள் அடங்கிய இரண்டாம் பாதியைக் கொஞ்சம் வெர்ஷன் அப்டேட் செய்திருந்தால், நிஜமாகவே ஸ்மார்ட்போன் காலத்துப் படமாக இது மாறியிருக்கும். இப்போது பழைய `1100′ போனாக ரிங் மட்டுமே அடிக்கிறது இந்த `சிம்ரன்’.