அரியலூர் அரசு கலைக் கல்லூரி சுற்றுச்சூழல் அறிவியல் துறைக்கு கட்டிடம் கட்ட தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி வழங்கிய பாமக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாசுக்கு மாணவ, மாணவிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டிலேயே அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மட்டுமே முதுகலை சுற்றுச்சூழல் அறிவியல் துறை 1998 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இளங்கலை பிரிவானது 2008 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த துறையில் மட்டும் சுமார் 135 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த துறைக்கு போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில், இந்த மாத தொடக்கத்தில் அரியலூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாசிடம் கட்டிடம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கித் தருமாறு மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை ஏற்ற அன்புமணி சுற்றுச்சூழல் துறைக்கு நிச்சயமாக செய்ய வேண்டும் என்று சொன்னதுடன், தனது பாராளுமன்ற நிதியிலிருந்து ரூபாய் 60 லட்சத்தை உடனடியாக ஒதுக்கியிருக்கிறார்.
கேட்டதும் நிதி ஒதுக்கீடு செய்த அன்புமணி ராமதாஸுக்கு மாணவ மாணவிகள் நன்றியை தெரிவித்ததுடன், அன்புமணியை போலவே சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்றும் சூளுரைத்தனர். தற்போதைய மாணவர்கள் மட்டுமல்லாது அக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அன்புமணிக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.