ஆசிரியர்கள் முன் தாய் அடித்ததால் பிளஸ் 2 மாணவன் தற்கொலை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த அத்திமரத்துப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மகன் கவுதம்(17), சிகரலப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 படித்து வந்தான். கடந்த 22ம் தேதி பள்ளியில் நடந்த திருப்பு தேர்வில் பக்கத்தில் அமர்ந்திருந்த மாணவனை பார்த்து கவுதம் எழுதியுள்ளான். இதனை பார்த்த ஆசிரியர் அவனை கண்டித்துள்ளார். மேலும் இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கவுதமை அழைத்து கண்டித்ததோடு, மறுநாள் தாயை பள்ளிக்கு அழைத்து வரவேண்டும் என கூறியுள்ளார். அதன்படி கவுதம் தனது தாய் சாந்தியை பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளான்.

அப்போது அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் ஆகியோர் கவுதம் தேர்வில் காப்பி அடித்தது தொடர்பாக தெரிவித்துள்ளனர். அவர்கள் முன் சாந்தி, கவுதமை அடித்துள்ளார். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட கவுதம், அன்றிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பர்கூர் போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.