பாகிஸ்தானில் தெற்கு சிந்து மாகாணத்தின் ஹைதராபாத் நகரத்தில் உள்ள ஷாஹி பஜாரில் வியாபாரம் செய்து வருபவர் சோஹைல் ஜீவானி. இவரின் மகள் இக்ரா ஜீவானி (வயது 16) கல்லூரியில் படித்து வந்தார். இக்ரா ஜீவானி ஆன்லைனில் ‘லுாடோ’ என்ற விளையாட்டை விரும்பி விளையாடிவந்தார். இந்த விளையாட்டு மூலம் இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முலாயம் சிங் (வயது 26), என்ற இளைஞருடன் நெருங்கிப் பழகி வந்தார்.
ஆன்லைனில் அறிமுகமான முலாயம் சிங், பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். அவர் தான் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக வேலை பார்த்து வருவதாகவும், தன்னுடைய பெயர் சமீம் அன்சாரி என்றும் கூறியுள்ளார். லுாடோ விளையாட்டு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.
இதையடுத்து, இக்ரா தன் நகைகளை விற்றும், நண்பர்களிடன் கடன் வாங்கியும் பணத்தைச் சேர்த்து, துபாய் சென்றார். அங்கிருந்து நேபாளம், காத்மாண்டுவுக்கு விமானத்தில் வந்தார். நேபாளத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அடுத்து, இந்தியா – நேபாள எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, பெங்களூருக்கு வந்து சேர்ந்தனர். பெங்களூரில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.
இக்ரா ஜீவானியின் பெயரை ரேவா என மாற்றிய முலாயம் சிங், அவருக்கு ஆதார் அட்டையும் வாங்கி, வாடகை வீட்டில் வசித்தனர். ரேவா என்ற பெயரில் இந்திய பாஸ்போர்ட்டுக்கும் விண்ணப்பித்துள்ளார்.
இதற்கிடையே, தன் மகளைக் காணவில்லை என சோஹைல் ஜீவானி, பாகிஸ்தான் போலீசில் புகார் செய்திருந்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
பெங்களூரில் ராவா என்ற பெயரில் ஹிந்துப் பெண்ணாக மாறிய இக்ரா தினமும் தொழுகை நடத்துவதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்தனர். இதனால் பக்கத்து வீட்டுக்காரர்கள், போலீஸுக்கு ரகசிய தகவல் கொடுத்தனர்.
கர்நாடக போலீஸார், முலாயம் சிங் – இக்ரா இருவரிடமும் நடத்திய விசாரணையில், முழு உண்மையும் வெளிவந்தது. அவர் இந்தியாவிற்குள் எப்படி வந்தார் என்பது குறித்து காவல்துறை மற்றும் உளவுத்துறையினர் தொடர்ந்து விசாரித்தனர்.
இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை இக்ரா வாகா எல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, வெளியுறவுத் துறை அதிகாரிகள் மூலம் பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட முலாயம் சிங் சிறையில் அடைக்கப்பட்டார்.
பெண்ணின் தந்தை சோஹைல் ஜீவானி இந்த சம்பவம் குறித்து கூறுகையில், “அவள் எப்போதும் கூச்ச சுபாவமுள்ள பெண். அவளுக்கு எப்படித் தனியாக இந்தியாவுக்குச் செல்லும் தைரியம் வந்தது என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. கடந்த செப்டம்பரில் கல்லூரிக்கு சென்றுவிட்டு இக்ரா காணாமல் போனதில் இருந்து, இன்று வரை அதிர்ச்சியில் இருந்து குடும்பம் இன்னும் மீளவில்லை” என்றார்.
பெண்ணின் மாமா அப்சல் ஜீவானி கூறுகையில், “அவளை மீட்க, எங்களுக்கு உதவிய பாகிஸ்தான் மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். சிறுமி பாகிஸ்தானுக்கு திரும்பியதில் இருந்து தன்னுடைய தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்டு வருகிறார்” என்றார்.