புலந்த்ஷாஹர்: இரையாக வைக்கப்பட்ட கோழியை திருட சென்றவர், சிறுத்தையின் கூண்டுக்குள் சிக்கிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டம் பசேந்துவா கிராமத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் இருந்ததால், குறிப்பிட்ட இடத்தில் வனத்துறையினரின் கூண்டு வைத்திருந்தனர். அந்த கூண்டுக்குள் சிறுத்தை சிக்க வேண்டும் என்பதற்காக கோழி ஒன்றை கட்டி போட்டு வைத்திருந்தனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர், சிறுத்தையின் கூண்டுக்குள் இருந்த கோழியை பிடித்து சாப்பிட வேண்டும் என்ற ஆசையில், சிறுத்தையின் கூண்டுக்குள் சென்று கோழியை பிடித்தார். பின்னர் கூண்டிலிருந்து வெளியே வர முயன்ற போது, அந்த கூண்டு உடனடியாக மூடிக் கொண்டது.
அதிர்ச்சியடைந்த அவர் என்ன செய்வதென்று தெரியாமல் பலமணி நேரம் தவித்தார். பின்னர் அவ்வழியாக சென்ற வனத்துறையினர், கூண்டுக்குள் சிக்கியிருக்கும் மனிதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவரிடம் விசாரித்ததில், கோழி திருட வந்த போது சிறுத்தையின் கூண்டுக்குள் சிக்கிக் கொண்டதாக தெரிவித்தார். இதுகுறித்து வனத்துறை அதிகாரி ராதேஷ்யாம் கூறுகையில், ‘சிறுத்தையை பிடிப்பதற்காக கோழியை கட்டிப்போட்டு வைத்திருந்தோம். கோழியை பிடிப்பதற்காக சென்ற நபர், அந்த கூண்டுக்குள் சிக்கிக் கொண்டார். பின்னர் அவருக்கு எச்சரிக்கை கொடுத்து விடுவித்தோம்’ என்றார்.