கரூர்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓட்டுக்குப் பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுத்து தண்டனை பெற்றுத் தரும், நேர்மையான அதிகாரிகளுக்கு ரூ.1 கோடி பரிசு மற்றும் பாராட்டு விழா வழங்கும் விழாவுக்கு விண்ணப்பிக்கலாம் என ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் செங்குந்தபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன் (43). தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு கரூர் மாநகராட்சி தேர்தலில் 26-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டார். அப்போது முத்தான 10 திட்டங்கள் எனக் கூறி முதல் நாள் 1 கோடி கொசுக்கள், 1 லட்சம் கரப்பான், 10,000 எலிகள், 100 தெருநாய்கள் ஒழிப்பேன் என தொடங்கி 10 நாட்களுக்கு 10 விதமான திட்டங்களை அறித்து நூதன பிரச்சாரம் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
மேலும், சென்ற கவுன்சிலர் தேர்தலில், ”கரூர் மாநகராட்சியில் ஓட்டுக்குப் பணம் கொடுக்காமல் நேர்மையான முறையில் தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்களுக்கு ரூ.1 கோடி பரிசு மற்றும் பாராட்டு விழா காமராஜபுரத்தில் நடைபெறும் என்று குறிப்பிட்டு இப்படிக்கு – ராஜேஸ் கண்ணன் 26-வது வார்டு கவுன்சிலர் வேட்பாளர்” என அவரது படத்துடன் சுவரொட்டி ஒட்டியிருந்தார். இந்த போஸ்டரும் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும், அத்தேர்தலில் 335 வாக்குகள் மட்டுமே பெற்று அவர் தோல்விடைந்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாளை மறுநாள் (பிப்.27) நடைபெறுகிறது. இதில் பிரதான கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பல்வேறு பரிசு பொருள்கள் வழங்கப்பட்டு வருவதாக புகார்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில், கரூர் மாநகராட்சி தேர்தலில் 26-வது வார்டில் போட்டியிட்டு தோல்வியடைந்த ராஜேஷ் கண்ணன் கவுன்சிலர் தேர்தலில் ஒட்டிய சுவரொட்டி போலவே இன்று (பிப்.25 தேதி) கரூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டி ஒட்டியுள்ளார்.
அதில், ”ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓட்டுக்குப் பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுத்து, தண்டனை பெற்றுத்தரும் நேர்மையான தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ.1 கோடி பரிசு மற்றும் பாராட்டு விழா கரூரில் பிப்.27 நடைபெறும்” என்று குறிப்பிட்டுள்ளார். இது பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இதுகுறித்து ராஜேஸ்கண்ணனிடம் கேட்டபோது, ”தவறுகள் நடப்பதற்கு அதிகாரிகளே உடந்தையாக இருக்கின்றனர். அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் தவறு நடக்காது. அதனை சுட்டிக்காட்டவே இந்தச் சுவரொட்டி” என்றார்.