ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மற்றும் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கில் நடைபெற்ற அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது. மாலை 6 மணிக்கு மேல் தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் அனைவரும் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அனைவரும் வெளியேறி வருகின்றனர். கடைசி நேரத்தில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க பறக்கும் படை எண்ணிக்கை 10ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடைசி நாளான இன்று எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின், சீமான் உள்ளிட்டோர் வீதி வீதியாக வாக்கு சேகரித்தனர்.