புதுடெல்லி: “புதிய கல்விக் கொள்கை, இந்திய கல்வி முறையை எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துள்ளது” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையப் பேரவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, ”நமது நாட்டில் கல்வி முறை முன்பு கடினமானதாக இருந்தது. கல்வி என்றால் அது கடினமாகத்தான் இருக்க வேண்டும் என்பது போல், கடினத்தன்மைக்கு கல்வி இலக்காகி இருந்தது. புதிய கல்விக் கொள்கை, நெகிழ்வுத்தன்மையை கொண்டுள்ளது. அதோடு, அது எதிர்காலத் தேவைக்கு ஏற்றதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் கல்விக்காக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் நோக்கம், திறன் மிக்க மனித வளத்திற்கான தலைமையகமாக இந்தியாவை மாற்றுவதே. செயல்முறை சார்ந்ததாக, தொழில்சார்ந்ததாக கல்விமுறை இருக்க வேண்டும். இதற்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில், மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி, அவர்கள் படிக்கும் படிப்புக்கான பயிற்சி ஆகியவற்றை வழங்குவதாக புதிய கல்விக் கொள்கை உள்ளது. வகுப்பறைக்கு வெளியேயும் கற்க வேண்டியதை மாணவர்கள் கற்க வழிவகை காணப்பட்டுள்ளது.
அமிர்த காலத்தின் முதல் பட்ஜெட்டில் இளைஞர்களுக்கும், அவர்களின் எதிர்காலத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இதன் காரணமாக இளைஞர்களின் எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்கும். கல்வி, திறன் இரண்டிலும் இளைஞர்கள் பிரகாசிக்க வேண்டும் என்பதே புதிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம்” என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.