2014, 2019 எனத் தொடர்ந்து இரண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றுக் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் பா.ஜ.க-வை, 2024-ல் எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகள், பலமான கூட்டணி அமைக்க செயல்பட்டுவருகின்றன.
அந்த வரிசையில், கடந்த ஆண்டு பீகாரில் பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, ஆர்.ஜே.டி, காங்கிரஸுடன் சேர்ந்து கூட்டணி (மகாபந்தன்)ஆட்சியமைத்த நிதிஷ் குமார், 2024-ல் பா.ஜ.க-வை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கப்போவதாக, பா.ஜ.க-வுக்கு எதிரான பல அரசியல் தலைவர்களைச் சந்தித்துவந்தார். ஆனால் பாஜகவோ, நிதிஷ் குமாருக்கு பிரதமர் ஆசை வந்துவிட்டது என விமர்சித்து வந்தது.
இந்த நிலையில், தன்னுடைய ஆலோசனையை ஏற்றால், 2024-ல் பா.ஜ.க-வை 100 இடங்களுக்குள் கட்டுப்படுத்தலாம் என நிதிஷ் குமார் தற்போது தெரிவித்திருக்கிறார்.
பீகார் மாநிலம், பூர்னியாவில் நடைபெற்ற மகாகத்பந்தன் (மகா கூட்டணி) பேரணியில் உரையாற்றிய நிதிஷ் குமார், “2024-ல் காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒற்றுமையாகப் போராடினால், பா.ஜ.க 100 இடங்களுக்குள் சுருட்டப்படும். ஆனால், காங்கிரஸ் இந்த விஷயத்தில் கூடிய விரைவில் முடிவெடுக்க வேண்டும்.
என்னுடைய ஆலோசனையை நீங்கள் (காங்கிரஸ்) ஏற்றுக்கொண்டால், பா.ஜ.க-வை 100 இடங்களுக்குள் கட்டுப்படுத்தலாம். இல்லையெனில், என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும். நடைமுறையில் நான் அதை நிகழ்த்திக்காட்டுவேன். பா.ஜ.க-வை, ஒட்டுமொத்த நாட்டிலிருந்துமே தூக்கியெறிய வேண்டும்” என்றும் கூறினார்.
சட்டீஸ்கரில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில், `மதச்சார்பற்ற, ஒத்த எண்ணம் கொண்ட எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதை எதிர்பார்ப்பதாக, கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.