பிரித்தானியாவில் ஒரே மருத்துவமனையில் ஒரே மகப்பேறு மருத்துவரால் பிள்ளை பெற்றெடுத்த இரு தாய்மார்கள் 6 வார இடைவெளியில் மரணமடைந்த சம்பவத்தில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிசேரியன் முறைப்படி மகப்பேறு
குறித்த தாய்மார்கள் இருவரும் தோல் வியாதியால் திடீரென்று பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
மட்டுமின்றி, இருவருமே சிசேரியன் முறைப்படி பிள்ளை பெற்றெடுத்துள்ளனர்.
29 வயதான கிம் சாம்ப்சன் என்பவர் தமது மகனை பெற்றெடுத்த பின்னர் தீவிரமான தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கென்ட்டின் மார்கேட்டில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையிலேயே இவருக்கு மகப்பேறு நடந்துள்ளது.
இவர் இறந்த 6 வாரங்களில் இன்னொரு தாயார், 32 வயதான சமந்தா முல்காஹி என்பவர் சிசேரியன் முறைப்படி பிள்ளை பெற்றெடுத்த பின்னர் தீவிர தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
2018 மே 3ம் திகதி மகப்பேறுக்காக சாம்ப்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, சிக்கல் இருப்பதாக கூறி சிசேரியன் முறைப்படி பிள்ளை பெற்றெடுக்க பரிந்துரைத்துள்ளனர்.
அறுவை சிகிச்சையின் பின்னர் அவருக்கு புதிதாக ரத்தமும் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து இரண்டு நாட்களில் கிம் சாம்ப்சன் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
ஆனால், அதன் பின்னர் அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டதுடன், நடக்கவும் முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.
அவரது நிலை மோசமடைய, மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லண்டனில் இன்னொரு மருத்துவமனை
அவருக்கு பாக்டீரியா செப்சிஸ் தொடர்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது நிலை மோசமடைய, லண்டனில் இன்னொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
@swns
அங்கே முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு அபாயகரமான ஹெர்பெஸ் தொற்று பாதித்திருப்பது உறுதியாகியுள்ளது.
ஆனால் மே 22 ம் திகதி சிகிச்சை பலனின்றி சாம்ப்சன் மரணமடைந்துள்ளார்.
இவர் இறந்த 6 வாரங்களுக்கு பின்னர் ஹெர்பெஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சமந்தா முல்காஹி என்ற தாயாரும் மரணமடைந்துள்ளார்.
சமந்தா முல்காஹி என்பவருக்கும் சிசேரியன் முறைப்படி மகப்பேறு முன்னெடுத்தவர் ஒரே மருத்துவர் என்றே தெரியவந்துள்ளது.
பொதுவாக ஹெர்பெஸ் தொற்றானது தோலின் மூலம் பரவுகிறது. 25 வயதை எட்டும் 70% பேர்களுக்கும் ஹெர்பெஸ் தொற்று பாதிப்பு காணப்படுவதாகவே கூறுகின்றனர்.
தற்போது இந்த இரு தாய்மார்களின் மரணம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்க உரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.