அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை பலவும் வியூகம் வகுத்து வருகின்றன. இந்த தேர்தலுக்கு முன்னோட்டமாக நடப்பாண்டு ஒன்பது மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதில் பெறும் வெற்றி 2024 மக்களவை தேர்தலுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் வரும் ஏப்ரல் – மே மாதங்களில் நடக்கவுள்ள கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
கர்நாடக சட்டமன்ற தேர்தல்
தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம். இதை தக்க வைக்க அக்கட்சி தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 2018 சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில்
காங்கிரஸ்
, மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை கவிழ்த்து பாஜக ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. அதன் பிறகான 4 ஆண்டுகள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அரசு ஒப்பந்தங்களில் கமிஷன் முதல் ஹிஜாப் சர்ச்சை வரை பல்வேறு அட்ராசிட்டிகள் அரங்கேறின.
எடியூரப்பாவிற்கு ஓய்வு
இவையெல்லாம் பாஜகவிற்கு எதிராக திரும்பி நிற்கின்றன. இந்த சூழலில் வரும் சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டு விட்டது. அவரை கட்சி ரீதியில் மட்டும் பயன்படுத்திக் கொள்ள பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. அதற்கு அவரது வயதும் ஒரு காரணம். தற்போது அவருக்கு 80 வயதாகிறது. எனவே அடுத்தகட்ட தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காய்களை நகர்த்தி வருகிறது.
லிங்காயத்து சமூக வாக்குகள்
எடியூரப்பாவை முதல்வர் பதவியில் நீக்கி பசவராஜ் பொம்மை பதவியேற்றதில் இருந்தே லிங்காயத்து சமூக மக்கள் அதிருப்தியில் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. தேர்தல் என்று வந்துவிட்டால் சாதி ரீதியிலான அணுகுமுறையை தவிர்க்க முடியாது. அனைத்து சாதியினரின் வாக்குகளையும் பெற சம்பந்தப்பட்ட சமூக தலைவர்களை கவர அரசியல் கட்சிகள் முயற்சி செய்யும். அதன்படி, எடியூரப்பா தேர்தல் அரசியலில் இல்லாத நிலையில் அவர் சார்ந்த லிங்காயத்து சமூக வாக்குகளை பெற பாஜக தலைமை பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது.
அதென்ன யோகி மாடல்?
அதாவது, லிங்காயத்து மடங்களின் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் வேலையில் தீவிரம் காட்டி கொண்டிருக்கிறது. இதனை ’யோகி மாடல்’ என்று அழைக்கின்றனர். ஏனெனில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு சமூகங்களை சேர்ந்த மடங்களை தன் வசம் வைத்திருப்பதில் தொடர் கவனம் செலுத்தி வருகிறார்.
ஜே.பி.நட்டா அழைப்பு
அவர்களுக்கு கட்சி ரீதியில் பதவிகள் கொடுப்பது, தேர்தலில் போட்டியிட சீட் வழங்குவது என காய்களை நகர்த்தி வருகிறார். இது பாஜக் தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சி அமைக்க பெரிதும் உதவியது. இதே பாணியை கர்நாடக மாநிலத்திலும் அரங்கேற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் கூட பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பல்வேறு மடங்களின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
சமூக வாக்குகளுக்கு குறி
உங்களுக்காக பாஜகவின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். மடங்களில் இருந்து அடுத்தகட்ட தலைவர்களை உருவாக்கவும், வரும் தேர்தலில் போட்டியிட வைக்கவும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இவர்களின் பேச்சிற்கு அந்த சமூகத்தை சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் கட்டுப்படுவர் என்பது தான் கணக்கு.
இதன்மூலம் லிங்காயத்து சமூகத்தினரை மட்டுமின்றி பஞ்சமாசாலி, குருபா, வால்மிகி, போவி சமாஜ் உள்ளிட்ட சமூகத்தினரையும் வசப்படுத்தும் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. பாஜகவின் யோகி மாடல் வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த அளவிற்கு கர்நாடகாவில் எடுபடப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.