காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலின் வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து கொடிக்கம்பம் அருகில் உள்ள மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
பின்னர் கோயில் ஸ்தானீகர்களால் அஸ்திர தேவர் வைக்கப் பட்டிருந்த சிறிய பல்லக்கு ஒன்றில் கொடிப் பட்டமும் வைக்கப்பட்டு மேளதாளங்களுடன் கோவில் சுற்றுப்பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதனை அடுத்து கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.
கொடியேற்றத்திற்கு பிறகு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது. வாண வேடிக்கைகளும் நடைபெற்றன.கொடியேற்ற விழாவில் கோவில் ஸ்ரீ காரியம் ந. சுந்தரேசு ஐயர், மணியக்காரர் சூரிய நாராயணன், கோயில் செயல் அலுவலர் சீனிவாசன் உள்பட பலரும் கலந்து கொண்டனர் .
பிரம்மோற்சவத்தையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கொடியேற்றத்தின் போது பரதநாட்டிய கலைஞர் சென்னையைச் சேர்ந்த விஜய் மாதவன் தலைமையில் பரதநாட்டிய கலை நிகழ்ச்சியும், திருவண்ணாமலை அரசு இசைப்பள்ளி முதல்வர் ஷியாமா கிருஷ்ணன் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பிரமோற்சவ விழாவையொட்டி தினசரி காலையிலும், மாலையிலும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி ராஜ வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். நிகழ் மாதம் 27ஆம் தேதி தங்க சிம்ம வாகனத்திலும் மார்ச் 3ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. மார்ச் 5ஆம் தேதி இரவு தேரோட்டம் நடைபெறுகிறது.மார்ச் 8 ஆம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.