கூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டான விநாயகபுரம் பகுதியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையம் வெட்டவெளியில் அமைந்துள்ளது. இங்கு 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். சுற்றுச்சுவர் இல்லாததால், இந்த மையத்தில் இரவு நேரங்களில் மது அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு சமூகவிரோத செயல்கள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அங்கன்வாடி மையத்தில் படிக்க வரும் குழந்தைகளின் நலன் கருதி, இங்கு சுற்றுச்சுவர் அமைத்து தரவேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் 4வது வார்டு உறுப்பினர் சசிகலா நேரில் வலியுறுத்தினார். இதையடுத்து, கனிமவள நிதியின்கீழ் ₹5 லட்சம் நிதி ஒதுக்கி சுற்றுச்சுவர் கட்டுவதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவருக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேற்று மாலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்டராகவன், தண்டபாணி ஆகியோர் மேற்பார்வையில், அங்கன்வாடி மையத்தில் ₹5 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு 4வது வார்டு உறுப்பினர் சசிகலா தலைமை தாங்கினார். ஒன்றிய மேற்பார்வையாளர் ரம்யா, ஊராட்சி மன்ற துணை தலைவர் ஏஜேகே.பாலாஜி முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கீரப்பாக்கம் ஊராட்சி தலைவர் செல்வசுந்தரி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, சுற்றுச்சுவர் அமைப்பதற்கான கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார். இதில் 3வது வார்டு உறுப்பினர் தீபா, ஊராட்சி செயலர் வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.