கோவை: கோடை காலத்தையொட்டி தீயணைப்பு துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு தீ தடுப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கோடை காலம் நெருங்கிய நிலையில் தீயணைப்பு துறை சார்பில் பல்வேறு இடங்களில் தீ தடுப்பு வழிமுறைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதன்படி கோவை அரசு கலைக்கல்லூரியில் கோவை தெற்கு மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் தீ தடுப்பு வழிமுறைகள் குறித்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தீயணைப்பு துறை அதிகாரிகள் சிவராஜ், செல்வ மோகன், முருகையன் ஆகியோர் முன்னிலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் தீ தடுப்பு வழிமுறைகள் குறித்து செய்து காண்பித்தனர்.
இதில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் பயன்படுத்தும் தீ தடுப்பு கருவிகள், தீ அணைப்பான் கருவிகளை உபயோகிக்கும் முறை, பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது, தீயை கட்டுப்படுத்தும் முறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவை குறித்து செய்து காண்பித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோவை அரசு கலைக் கல்லூரி முதல்வர் உலகி, கல்லூரி பேராசிரியர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தீ தடுப்பு வழிமுறைகள் குறித்து தெரிந்து கொண்டனர்.