சரியும் சிறுவாணி அணையின் நீர்மட்டம்: பில்லூர் திட்டத்தில் கூடுதல் குடிநீர் எடுத்து விநியோகிக்கும் கோவை மாநகராட்சி

கோவை: சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் பில்லூர் திட்டங்களில் இருந்து கூடுதல் குடிநீர் எடுக்கப்பட்டு மாநகருக்கு மாநகராட்சி நிர்வாகத்தினர் விநியோகித்து வருகின்றனர்.

கோவை மாநகராட்சியால் சிறுவாணி, பில்லூர் 1 மற்றும் 2, வடவள்ளி – கவுண்டம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம், ஆழியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் போன்றவற்றின் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு மாநகருக்கு விநியோகிக்கப்படுகிறது. இதில், சிறுவாணி அணை, கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் குடிநீர் மாநகராட்சியின் 30-க்கும் மேற்பட்ட வார்டுகள் மற்றும் வழியோரத்தில் உள்ள 22-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

சிறுவாணி அணையில் 49.50 அடி (878.50 மீட்டர்) அளவுக்கு நீரைத் தேக்கலாம். ஆனால், கேரள அரசின் உத்தரவால் 45 அடி உயரம் வரைக்கும் மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது. சிறுவாணி அணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தினமும் சராசரியாக 80 முதல் 100 எம்.எல்.டி அளவுக்கு குடிநீர் எடுக்கப்பட்டு மாநகருக்கும், வழியோர கிராமங்களுக்கும் விநியோகிக்கப்பட்டது. இச்சூழலில் அணையிலிருந்து எடுக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு தென்மேற்கு பருவமழைக்காலத்தில் சிறுவாணி அணைப் பகுதியில் மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. கடந்தாண்டு நான்கு முறைக்கு மேல் சிறுவாணி அணையில் 45 அடியை நீர்மட்டம் தொட்டது. ஆனால், நடப்பாண்டு ஒருமுறை கூட 45 அடியை நெருங்கவில்லை. மழை குறைவாக பெய்ததும், 44.50 அடிக்கு நீர் மட்டம் வந்த உடனேயே கேரளா அரசு அதிகாரிகள் பலமுறை தண்ணீரை வெளியேற்றியதாலும் அணையில் தேவையான நீரை சேகரிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இதுதொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘சிறுவாணி அணையில் கடந்த 22-ம் தேதி நிலவரப்படி 18.07 அடி, 23-ம் தேதி நிலவரப்படி 17.68 அடி, 24-ம் தேதி நிலவரப்படி 17.38 அடி, இன்றைய (25-ம தேதி) நிலவரப்படி 17.15 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. இன்றைய நிலவரப்படி அணையிலிருந்து 57.50 எம்.எல்.டி அளவுக்கு குடிநீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. சிறுவாணி அணையிலிருந்து எடுக்கப்படும் குடிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

அணையின் நீர் எடுக்கும் பகுதியில் 2 வால்வுகள் வெளியே தெரிகின்றன. கடந்த சில நாட்களாக சராசரியாக 55 முதல் 60 எம்.எல்.டி அளவுக்கு மட்டுமே குடிநீர் எடுக்கப்படுகிறது. இதேநிலையில் தண்ணீர் எடுத்தால், மே மாதம் வரை கோவை நகருக்கு சிறுவாணி குடிநீர் விநியோகிக்க முடியும். வழியோர கிராமங்களுக்கும் அனுமதிக்கப்பட்ட 2 முதல் 3 எம்.எல்.டி அளவுக்கு மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்,’’ என்றனர்.

மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் கூறும்போது, ‘‘சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் நீரின் அளவு குறைந்ததால், அதற்கு மாற்றாக பில்லூர் 1 மற்றும் 2 திட்டங்களில் இருந்து கூடுதல் எம்.எல்.டி அளவுக்கு குடிநீர் எடுக்கப்பட்டு மாநகருக்கு தட்டுப்பாடு இல்லாமல் விநியோகிக்கப்படுகிறது. பில்லூர் 1 மற்றும் 2 திட்டங்களின் மூலம் தற்போது சராசரியாக 150 எம்.எல்.டி வரை குடிநீர் எடுக்கப்படுகிறது. பில்லூர் 2-ல் முன்பு 32 எம்.எல்.டி எடுக்கப்பட்ட நிலையில் தற்போது சராசரியாக 45 எம்.எல்.டி எடுக்கப்படுகிறது’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.