தெலுங்கானாவில் திருமண மண்டபமாக மாறிய மருத்துவமனை வார்டு| Hospital ward turned marriage hall in Telangana

ஹைதராபாத் : தெலுங்கானாவில் திருமண நாளன்று மணமகள் மருத்துவமனையில் இருந்ததால், நிச்சயிக்கப்பட்ட நாளில் திருமணத்தை நடத்த வேண்டும் என்பதற்காக, மருத்துவமனை வார்டு திருமண மண்டபமாக மாறி, திருமணம் இனிதாக நடந்தேறியது.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத் ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.

அறுவை சிகிச்சை

இங்கு, ஹைதராபாத் அருகே மஞ்சேரியல் என்ற இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக, ஷைலஜா என்ற பெண் அனுமதிக்கப்பட்டார்.

மறுநாள் திருமணம் நடக்கவிருந்த நிலையில், மணமகள் ஷைலஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, உறவினர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

உறவினர்கள், நண்பர்கள் மண்டபத்துக்கு வரத் துவங்கினர்.

இதனால், என்ன செய்வது என்று அறியாமல் திகைத்த மணமகளின் குடும்பத்தினர், திருமணத்தை நிறுத்தி விடலாமா என குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

திருமணத்துக்காக செய்யப்பட்ட செலவுகள் வீணாவதை தடுக்கும் வகையிலும், மணமகள் குடும்பத்தினரின் குழப்பத்தை தீர்க்கும் வகையிலும் நிச்சயிக்கப்பட்ட நாளில் திருமணத்தை நடத்த மணமகன் தீர்மானித்தார்.

இதன்படி, மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து, வார்டில் தங்கியிருந்த மணமகளை, அங்கேயே வைத்து தாலி கட்டி திருமணம் செய்ய அவர் முடிவெடுத்தார்.

எனவே, இரு குடும்பத்தினரும், மருத்துவமனை நிர்வாகத்தை அணுகி, அங்கேயே திருமணம் நடத்த அனுமதிக்குமாறு கேட்டனர்.

நெகிழ்ச்சி

மருத்துவமனை நிர்வாகமும் அனுமதி அளித்ததோடு,திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்தது.

இதையடுத்து, திருமண மண்டபமாக மாறிய மருத்துவமனை வார்டிலேயே, உறவினர்கள் புடைசூழ திருமணம் நடந்தேறியது.

‘மருத்துவமனை என் தங்கையின் உயிரை மட்டும் காப்பாற்றவில்லை. ஒரு பெற்றோர் போல்முன்னிருந்து திருமணத்தை நடத்தி வைத்துள்ளது’ என, மணமகளின் சகோதரி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இச்சம்பவம் அப்பகுதியில் மகிழ்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.