டெல்லி : புதிய கல்வி கொள்கையில் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு சம அளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இளைய சமுதாயத்தின் ஆற்றலே தேசிய வளர்ச்சிக்கு பயன்படுத்தல் என்ற தலைப்பிலான பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி, வாழ்வியலுக்கு ஏற்றவாறு கல்வி நடைமுறையை மாற்றி அமைப்பதற்கும் இந்திய தொழில் துறையில் நமது மாணவர்கள் சாதனை புரிவதற்கும் ஏதுவாக நடப்பு நிதியாண்டில் பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
தேசிய டிஜிட்டல் உலகம் , மெய்நிகர் ஆய்வகங்கள் ஆகியவை கல்வித்துறையில் ஏற்படுத்தப்படும் மாபெரும் சீர்திருத்தம் என்றும் பிரதமர் மோடி கூறினார். நமது இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவு, டிரோன் தொழில்நுட்பத்தில் தலை சிறந்தவர்களாக விளங்குவதற்கு புதிய கல்வி கொள்கை வழிவகுக்கும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.மாணவர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்குவதன் மூலம் தொழிற்துறை முன்னேற்றத்திற்கு சரியான பணியாளர்களை தேர்வு செய்ய முடியும் என்று தெரிவித்தார்.தேசிய தொழிற்பயிற்சி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் 50 லட்சம் இளைஞர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.