Simbu Marriage Update: நடிகர் சிம்பு குறித்த தகவலோ அல்லது வதந்தியோ எது வெளியானாலும் அது வைரல்தான். சிம்புவுக்கும் காதலுக்கு உள்ள ராசியை விட சிம்புவுக்கும் சர்ச்சைக்கும்தான் அதிக ஜோடி பொருத்தம் என்பது கோலிவுட் வட்டாரத்தில் பொதுவாக கூறப்படும். இருப்பினும், சிம்பு தன் மீது வரும் அத்தனை அவதூறுகளையும், வதந்திகளையும் டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொண்டு அடுத்த வேலைக்கு கிளம்பிவிடுவார், இதுவே அவரின் ஸ்பெஷாலிட்டி.
பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் தனது கொடியை பறக்கவிட்டு வரும் சிம்பு இளைஞர்களுக்கு டிரெண்ட்செட்டராகவும் இருந்து வருகிறார். பலவித கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கெட்டிக்காரரான சிம்பு, சமீபகாலங்களில் அதனை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளார். ஒரு காலத்தில் இவரிடம் எந்த பெரிய இயக்குநரும் வேலை வாங்க முடியாது என குற்றச்சாட்டுகள் வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன், வெங்கட் பிரபு என பிரபல இயக்குநர்களுடன் கைக்கோர்த்து பிரம்மாண்ட வெற்றியையும் பதிவுசெய்திருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன் அவரின் உடல்எடை அதிகரித்திருந்த நிலையில், அவர் நடிப்பும் குறித்து விமர்சனமும் அதிகரித்தது. மேலும், அவர் படப்பிடிப்புக்கு முறையாக வர மறுக்கிறார் எனவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அனைத்திற்கு மௌனத்தை முதல் பதிலாக அளித்த சிம்பு, சில மாதங்களிலேயே உடல்எடையை குறைத்து, அடுத்தடுத்து படங்களில் நடித்து அனைத்து புகார்களையும் அடித்து நொறுக்கி பதிலடி கொடுத்தார். அதுபோன்ற, அவரின் காதல் வாழ்வு குறித்தும் பல வதந்திகள் கிளம்பும். முதலில் நயன்தாராவை அவர் காதலித்த போதும், பின் ஹன்சிகாவை காதலித்த போதும் அடுக்கடுக்காக வதந்திகள் கிளம்பியிருந்தன.
அந்த இரண்டு காதலும் அவருக்கு கைக்கூடாத நிலையில், அவர் பல ஆண்டுகளாக திருமணம் குறித்த பேச்சையே தவிர்த்து வந்தார். அந்த வகையில், அவர் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவரை காதலித்து வருவதாகவும், மருத்துவராக உள்ள அவரை விரைவில் சிம்பு திருமணம் செய்ய உள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் பரவின. மேலும், அந்த பெண்ணின் தந்தை கோடீஸ்வரர் என்றும் தகவல்கள் வெளிவந்தன.
இந்நிலையில், இந்த தகவல்களுக்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்து சிம்பு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுகுறித்து, நடிகர் சிம்புவின், அலுலக ஊடக மேலாளரான ஹரிஹரன் கஜேந்திரன்,”நடிகர் சிலம்பரசன் இலங்கைத் தமிழ் பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் என்ற செய்தியை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம். அதன் பின்னால் எந்த உண்மையும் இல்லை. திருமணத்தைப் பற்றிய நல்ல செய்திகள் வந்தால், அதை முதலில் அழைப்பதும், தெரிவிப்பதும் ஊடகங்களுக்குதான்” என தெரிவித்துள்ளார். இதனால், சிம்பு, இலங்கை பெண்ணை காதலிக்கிறார் என சமீபத்தில் வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.