திருமலை: மகாராஷ்டிர மாநிலம் குல்பர்காவில் இருந்து டீசல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி நேற்று ஆந்திராவுக்கு புறப்பட்டது. தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கோத்தகூடம் மாவட்டம் தம்மபேட்டா மண்டலம் முஷ்டிபண்டா கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்தது. அப்போது எதிரே வேகமாக லாரி வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க டேங்கர் லாரியை டிரைவர் திருப்பினார். இதனால் நிலை தடுமாறிய லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் லேசான காயம் அடைந்தார்.
விபத்துக்குள்ளான லாரியில் இருந்த டீசல் பள்ளத்தில் கொட்டி ஆறாக ஓடியது. இதையறிந்த அப்பகுதிமக்கள் பக்கெட், கேன்களை கொண்டு வந்து டீசலை போட்டி போட்டு பிடித்தனர். சம்பவ இடத்திற்கு மக்கள் அதிகளவில் வந்ததால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தம்மம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கூட்டத்தை கலைத்தனர்.