தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கட்டுப்பாட்டாளராக யுவராஜ் உள்ளார். தொழிற்சங்க நிர்வாகியான யுவராஜ், சமீப காலமாக தனக்கு வேண்டிய சிலருக்கு மட்டும், அவர்கள் கேட்கும் வழித்தடத்தை ஒதுக்குவதாகவும், மற்றவர்களுக்கு சரிவர பணி ஒதுக்கீடு செய்யாமல், தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், தொழிலாளர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன், டிரைவர் ராஜா என்பவருக்கு தொடர்ந்து பணி வழங்காமல், காத்திருப்பில் வைத்து விட்டு, யுவராஜ் வேறு ஒருவருக்கு பணியை வழங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜா, இதுகுறித்து தட்டிக் கேட்டதுடன், யுவராஜூடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதில், இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி அடிதடியில் இறங்கினர்.
உடன் பணியாற்றியவர்கள் அவர்களை விலக்கி விட்டனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக தர்மபுரி மண்டல மேலாளர் விசாரணை நடத்தினார். இச்சம்பவத்திற்கு காரணமான போக்குவரத்துக்கழக பணிமனை கிளை மேலாளர் இளங்கோவன், கட்டுப்பாட்டாளர் யுவராஜ், டிரைவர்கள் ராஜா, சுரேஷ்குமார், காவலாளி அருண் ஆகிய 5 பேரை பணியிடை நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டுள்ளார்.