காரைக்காலில் இருந்து அபுதாபி சென்று அங்குள்ள நைட் கிளப்பில் நடனமாடி வந்த பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப்பெண்ணின் சடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க கோரி அவரது சகோதரிகள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தனர்…
உல்லாச பிரியர்களின் சொர்க்கபுரியான அபுதாபியில் ஏராளமான நைட் கிளப்புகள் உள்ளன. பல்வேறு நாடுகளை சேர்ந்த நடன மங்கைகளை நடனமாட வைத்து தங்கள் ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் இங்குள்ள இரவு விதிகளில் இந்தியாவில் இருந்தும் நடன மங்கையர் பங்கேற்று ஆடி வருகின்றனர். இங்குள்ள இரவு விடுதியில் தங்கி நடனமாடி வந்த காரைக்காலை சேர்ந்த அருணா என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டிய சகோதரிகள் , தங்கள் சகோதரியின் சடலத்தை இந்தியாவுக்கு கொண்டுவர உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பவத்துக்கு முந்தைய நாள் கூட அருணா, தங்களுடன் நன்றாக பேசிக் கொண்டிருந்ததாகவும், அவரது உயிரிழப்பால் 3 குழந்தைகளும் ஆதரவற்ற நிலைக்கு மாறி உள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
உள்ளூரில் நடன கலைஞர்களுக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்த அருணாவை, சென்னையை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஒப்பந்த அடிப்படையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அபுதாபிக்கு அழைத்துச் சென்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப கஷ்டத்தை போக்க வெளி நாடுகளுக்கு நடனமாடச்செல்லும் பெண்கள் வாழ்க்கையை தொலைத்து விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிக்களாய் மரித்து போவது பரிதாபத்துக்குரிய சோகம்..!