கும்பகோணம் / மயிலாடுதுறை: பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில், அதன் நிறுவனரும், பாமக நிறுவனருமான ராமதாஸ், தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலிருந்தும் காணாமல் போன ‘தமிழைத் தேடி’ என்ற விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை மேற்கொண்டுள்ளார். பிப்.21-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கிய இந்த பிரச்சார பயணம் நேற்று கும்பகோணம் வந்தடைந்தது.
அங்கு நடைபெற்ற கூட்டத்தில் ராமதாஸ் பேசியது: தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் தமிழுக்காக பெரும் சோதனைகளை கடந்து பல நூல்களை பதிப்பு செய்துள்ளார். ஆனால் நாம் தமிழை அழித்துக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் ஒருவர் பேசும் 10 வார்த்தைகளில் ஒரு வார்த்தை மட்டும் தான் தமிழில் உள்ளது.
இதே போல தற்போது பெரும்பாலும் கொச்சைத் தமிழ் வார்த்தைகள் பேசப்பட்டு வருகின்றன. கும்பகோணத்திலுள்ள தமிழறிஞர்கள் கூட்டம் நடத்தி, பிற மொழிகளில் பெயர்ப் பலகை வைத்திருந்தால் கருப்பு மை பூசுவோம் என முடிவெடுத்தால், அனைவரும் தமிழில் எழுதுவார்கள். தமிழகத்தில் தற்போது தமிழ் உயிரிழந்து வருகிறது. அதை நாம் உயிர்ப்பிக்க வேண்டும்.
நாம் தமிழைத் தொலைத்து விட்டு நிற்கிறோம். அதனால் நான் தமிழைத் தேடி மதுரையை நோக்கி பரப்புரையை மேற்கொண்டுள்ளேன். நாம் அனைவரும் பிற மொழி கலப்பில்லாமல் பேச வேண்டும், தவறும் பட்சத்தில் நமக்கு நாமே அபராதம் விதித்துக் கொள்ள வேண்டும். இது போன்று செய்தால் தான், விரைவில் தமிழ் மொழியில் மட்டும் பேச முடியும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், கவுரவத் தலைவர் கோ.க.மணி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முன்னதாக மயிலாடுதுறையில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற கூட்டத்தில் ராமதாஸ் பேசியது: தமிழை வளர்ப்பதில் சைவ மடங்களின் பங்கு அளப்பரியது. தருமபுரம் ஆதீனம் தமிழ் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. ஆனால், இன்று அறிஞர்கள் முதல் சாமானியர்கள் வரை எல்லோருமே பிற மொழிகள் கலப்பின்றி தமிழ் பேசுவதில்லை.
மெல்லத் தமிழ் இனி சாகும் என நீலகண்ட சாஸ்திரி கூறினார். ஆனால், தமிழ் தற்போது வேகமாக அழிந்து கொண்டிருக்கிறது. இனியாவது நாம் தமிழை மீட்டெடுக்க வேண்டும் என்றார்.