ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை பெறும் இ-சஞ்ஜீவனி செயலி மூலமாக 10 கோடி பேர் பலன் பெற்றனர்: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை பெறக்கூடிய இ-சஞ்ஜீவனி செயலில் மூலம் பலனடைந்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டி இருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். அகில இந்திய வானொலியின் 98வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:
வேகமாக முன்னேறி வரும் டிஜிட்டல் இந்தியாவின் பலம், மூலை முடுக்கெங்கும் காணப்படுகிறது. இதற்கு பல்வேறு செயலிகள் (மொபைல் ஆப்) பெரும் பங்காற்றி வருகின்றன.  இப்படிப்பட்ட ஒரு செயலி தான், இ-சஞ்ஜீவனி. இந்தச் செயலி வாயிலாக தொலைபேசிவழி மருத்துவ ஆலோசனை, அதாவது தொலைவான பகுதிகளில் இருந்தவாறே, காணொளி ஆலோசனை மூலமாக, மருத்துவர்களிடம் தங்கள் நோய்கள் குறித்த ஆலோசனைகளைப் பெற முடிகிறது.
இந்தச் செயலியைப் பயன்படுத்தி, இதுவரை தொலைபேசி ஆலோசனை செய்வோரின் எண்ணிக்கை 10 கோடி என்ற எண்ணிக்கையை கடந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.  இந்திய மக்கள் தொழில்நுட்பத்தை எவ்வாறு தங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு நடைமுறை எடுத்துக்காட்டு. இது இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியின் சக்தி.

இதே போல, சில நாட்கள் முன்பாக இந்தியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையே, யுபிஐ-பே நவ் இணைப்பு தொடங்கப்பட்டது. இதன் மூலம், சிங்கப்பூர் மற்றும் இந்திய மக்கள் அவரவர் தங்கள் நாடுகளுக்குள்ளே எப்படி பணப்பரிமாற்றத்தைச் செய்து கொள்கிறார்களோ, அதைப் போலவே இப்போது பரஸ்பரம் பரிமாற்றத்தைச் செய்து கொள்ள முடியும்.  இ-சஞ்ஜீவனியும், யுபிஐயும், வாழ்க்கையை சுலபமாக்கும் தன்மையை அதிகரிப்பதில் மிகவும் உதவிகரமாக இருக்கின்றன. நம் நாட்டில் தயாரிக்கப்படும் விளையாட்டுப் பொருட்களுக்கு வெளிநாட்டிலும் இப்போது தேவை மிகவும் அதிகரித்து வருகிறது.  இன்றிலிருந்து சில நாட்கள் கழித்து ஹோலி பண்டிகை வரவிருக்கிறது.  அனைவருக்கும் ஹோலி பண்டிகைக்கான நல்வாழ்த்துக்கள்.  நாம், நமது பண்டிகைகளின் போது உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு அளிப்போம் என்ற உறுதிப்பாட்டோடு கொண்டாட வேண்டும்.

* வேகமாக வளர்கிறது உபி உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் நேற்று நடந்த வேலைவாய்ப்பு திருவிழாவில் சப் இன்ஸ்பெக்டர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தேர்வான 9,055க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணையை பிரதமர் மோடி வழங்கி பேசுகையில், ‘‘முந்தைய காலங்களில் மோசமான சட்டம் ஒழுங்கு, மாபியா கும்பல் போன்றவைகளுக்கு பேர் போன உத்தரப்பிரதேசம் இன்று சிறப்பான சட்டம் ஒழுங்கு, வேகமாக வளரும் மாநிலமாக மாறியிருக்கிறது. பாதுகாப்பான சூழலால் முதலீடுகள் பெருகுகின்றன’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.