இடைத்தேர்தல்: வாக்களிக்க காத்திருக்கும் ஈரோடு கிழக்கு… வாக்குப்பதிவுக்கு எல்லாம் ரெடி!

Erode East By-Election Polling: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பரப்புரை நேற்று (பிப். 25) மாலை உடன் முடிவடைந்தது. தொகுதி முழுவதும் நாளை (பிப். 27) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த தேர்தலில், மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக ஈவிகேஎஸ் இளங்களோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா ஆகியோர் முக்கிய வேட்பாளராக அறியப்படுகின்றனர்.

மொத்த வாக்காளர்கள்

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 33 வார்டுகள் உள்ளன. இதில், ஆண் வேட்பாளர்கள் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 713 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 140 பேரும், மாற்று பாலினத்தவர்கள், ராணுவ வீரர்கள் 45 பேரும் உள்ளனர். அதாவது மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்து 898 ஆகும்.

இந்த இடைத்தேர்தலில், தொகுதிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் 52 வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டு, 238 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்கு சாவடிகளாக தேர்தல் ஆணையத்தால் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஏற்பாடுகள் தீவிரம்

இந்த இடைத் தேர்தலில் 1,430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் 286 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் 310 சரிபார்ப்பு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளது. இவை அனைத்தும் வாக்குப்பதிவு மையங்களுக்கு கொண்டுவரப்பட்டன.

இந்த இடைத்தேர்தலில் ஐந்துக்கும் மேற்பட்ட துணை ராணுவம் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை தொடங்கும் நிலையில், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி இன்று காலை தொடங்கியது.

வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் சீல் வைக்கப்பட்டிருந்தது. இதனை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்பாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிருஷ்ணனுண்ணி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் அலுவலர் சிவக்குமார் ஆகியோர் வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் இருந்து அந்தந்த பகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணியை தொடங்கி வைத்தனர். வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் நிலையில், மாலை 6 மணிவரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அனுப்பி வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அந்தந்த வாக்குச்சாவடியில் உள்ள ஊழியர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனை பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் சென்று தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ், மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான கிருஷ்ணனுண்ணி, கிழக்கு சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.