புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
2-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார். அதன்படி, பிப்ரவரி மாதத்திற்கான மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. இது 98-வது மன் கி பாத் நிகழ்ச்சியாகும்.
இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றும்போது, தற்போதுள்ள காலகட்டத்தில் இந்திய பொம்மைகள் மீதுள்ள ஆர்வம் அதிகரித்து, அதற்கான தேவை வெளிநாடுகளில் கூட அதிகரித்து உள்ளன.
இந்தியாவின் தனி பண்புகளை பற்றி, மன் கி பாத் நிகழ்ச்சியில் நாம் கதைகளாக பேசும்போது, அவற்றின் புகழ் கூட தொலைதூரத்திற்கு மற்றும் பரவலாக சென்று சேர்கிறது.
சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினம் ஒற்றுமை தினம் என கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளில், மன் கி பாத் நிகழ்ச்சியில் 3 போட்டிகளை பற்றி நாம் பேசினோம். இந்த போட்டிகள், பாடல்களுடன் தொடர்பு கொண்டவைகளாக இருந்தன.
நாட்டுப்பற்று பாடல்கள், தாலாட்டு மற்றும் ரங்கோலி போன்ற போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளில் நாட்டில் உள்ள 700 மாவட்டங்களில் இருந்து 5 லட்சத்திற்கும் கூடுதலானோர் கலந்து கொண்டனர் என்பது எனக்கு அதிக மகிழ்ச்சியை அளித்தது என உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் பேசியுள்ளார்.