டெல்லி துணை முதல்வர் சிசோடியா கைது… சிபிஐ விசாரணையில் என்ன நடந்தது?

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவரு்ம, டெல்லி துணை முதலமைச்சருமான  மனீஷ் சிசோடியா மீது மதுபான ஊழல் தொடரப்பட்டது. கலால் துறை அமைச்சரான சிசோடியா, டெல்லியில் புதிய மதுபான விற்பனை கொள்கையை கொண்டு வந்ததில், அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை வைக்கப்பட்டது. இந்த வழக்கில் 7 பேர் தொடர்புடைய நிலையில், வழக்கின் குற்றப்பத்திரிகையில் சிசோடியாவின் பெயர் இடம்பெறவில்லை. ஆனால், விரைவில் துணை குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021 மதுபானக் கொள்கையை வகுப்பதில் மதுபான நிறுவனங்களுக்கு தொடர்பு இருப்பதாக சிபிஐ வாதிடுகிறது. “சவுத் குரூப்” என்று அழைக்கப்படும் ஒரு மதுபான நிறுவனம் ரூ.100 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்துள்ளது. இந்த கொள்கை அந்த நிறுவனத்திற்கு 12 சதவீத லாபத்தை ஈட்டித்தரும். அதில் 6 சதவீதம் இடைத்தரகர்கள் மூலம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. பணப்பட்டுவாடா செய்யப்பட்டது குறித்து அமலாக்கத்துறையும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. 

7-8 மணிநேரம் விசாரணை 

இந்த வழக்கு தொடர்பாக, தொடர் விசாரணை நடைபெற்று வந்தது. அந்த வகையில், தங்கள் முன் விசாரணைக்கு இன்று ஆஜராகும்படி மனீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.  இருப்பினும், டெல்லி நிதியமைச்சராக உள்ள சிசோடியா, 2022-2023 டெல்லி பட்ஜெட் பணிகள் இருப்பதால், விசாரணைக்கு ஆஜராவதை தள்ளிவைக்க கோரிக்கை வைத்தார். 

இருப்பினும், அவர் இன்று விசாரணைக்கு சிபிஐ முன் ஆஜாரானார். இன்று காலை 11.10 மணியளவில் அவரிடம் விசாரணை தொடங்கப்பட்டது. அவரிடம் 7-8 மணிநேரம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசராணைக்கு பின் இன்றிரவு அவர் கைது செய்யப்பட்டார். முன்னர் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைதாகி சிறையில் இருக்கும் நிலையில், அவரை தொடர்ந்து இரண்டாவது அமைச்சராக சிசோடியா கைதுசெய்யப்பட்டார். 

சிசோடியா கைதுசெய்யப்பட்ட நிலையில், மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்து டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார். அதில்,”மனீஷ் அப்பாவி. அவரது கைது ஒரு கேவலமான அரசியலை குறிக்கிறது. சிசோடியாவின் கைது நடவடிக்கையால் மக்கள் மத்தியில் கடும் கோபம் நிலவுகிறது. அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மக்களுக்கு எல்லாம் புரியும். இதற்கு மக்கள் பதிலளிப்பார்கள். இது நமது ஆன்மாவை மேலும் மேம்படுத்தும். நமது போராட்டம் வலுவடையும்” என குறிப்பிட்டுள்ளார்.

 

சிசோடியா நிச்சயம் கைது செய்யப்படுவார் என ஆம் ஆத்மி கட்சியும் எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று இரவு போராட்டம் நடத்தப்படுமா என்பது எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலையில், ஆம் ஆத்மி கட்சியின் போராட்டம் கலைக்கப்பட்டது. கட்சியின் பல தலைவர்கள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிசோடியாவிடம் என்ன கேட்கப்பட்டது?

கோவா தேர்தலில் பிரச்சாரம் செய்ய பெறப்பட்ட பணம் குறித்து இன்றைய விசாரணையில் அவரிடம் கேட்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டு, தற்போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட தினேஷ் அரோரா சார்ந்த கேள்வியையும் சிசோடியா எதிர்கொண்டார் என கூறப்படுகிறது. 

தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவின் மகளான கே.கவிதாவின் முன்னாள் கணக்காளராக இருந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த புச்சிபாபு கோரண்ட்லா குறித்தும் சிசோடியாவிடம் கேட்கப்பட்டது. பிப். மாத தொடக்கத்தில் கோரண்ட்லாவை சிபிஐ கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.