திருத்தணி கோயிலுக்கு ₹32 லட்சத்தில் மரத்தேர்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றவும், பிரமோற்சவங்கள் நடக்கும்போது மாடவீதியில் உற்சவர், தங்கத்தேர், வெள்ளித் தேர் ஆகியவற்றில் உலா வருவதற்கு வசதியாக, தங்கத்தேர், வெள்ளித் தேர் கோயிலில் இருந்தன. முறையாக கோயில் நிர்வாகம் பராமரிக்காததால் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் வெள்ளித்தேர், தங்கத்தேர் பழுதடைந்தன. இந்து அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவின் பேரில் கடந்த ஆண்டு இறுதியில் தங்கத்தேர் சீரமைக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

இதேபோல், வெள்ளித்தேர் செய்வதற்கு ஏதுவாக, மரத்தேர் செய்து தருவதாக பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கோயில் நிர்வாகத்திடம் கடந்தாண்டு கோரிக்கை வைத்தார். கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியதை அடுத்து ₹32 லட்சம் மதிப்பீட்டில் மரத்தேர் செய்யும் பணிகள் மலைக்கோவில் கோயில் வளாகத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், மரத்தேர் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து, நேற்று காலை சிறப்பு பூஜைகளுக்கு பின் மரத்தேர் நன்கொடை வழங்கிய தொழிலதிபர் சுப்பிரமணி, கோயில் துணை ஆணையர் விஜயாவிடம் மரத்தேரினை ஒப்படைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.