விவாகரத்துக்கு காரணமாகிறதா செக்ஸ்? |காமத்துக்கு மரியாதை – S3 E30

“சமீப காலமாக விவாகரத்துகள் பெருகி விட்டன. அதற்கு காரணம் செக்ஸ் பிர்ச்னைகள்தான் என பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கருத்தில் உண்மை எந்தளவுக்கு இருக்கிறது தெரியுமா” என்ற கேள்வியுடன்,  பேச ஆரம்பித்தார் மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி.

“விவாகரத்து அதிகரித்திருப்பது உண்மைதான். அதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. அந்தக் காலத்தில் அபூர்வமாக எங்கோ சிலர் பிரிந்து வாழ்ந்து வந்தார்கள் என்றாலும்,  விவாகரத்து என்கிற வார்த்தையே கெட்ட வார்த்தையாகத்தான் அப்போதைய சமூகத்தில் பார்க்கப்பட்டது. இப்போது நிலைமை அப்படியில்லை. பொருந்தாத திருமண பந்தத்தில் இருந்து கொண்டு, இருவரும் கஷ்டப்பட வேண்டாம் என்று தெளிவாகச் சிந்திருக்கிறார்கள். அதனால் விவாகரத்து இயல்பானதாக மாறிவிட்டது.  

Dr. Narayana Reddy

அந்தக் காலத்தில் கணவன் என்றால் திட்டுவான், கை ஓங்குவான், அடிக்கிற கையால் அணைக்கவும் செய்வான், எல்லா ஆண்களுமே இப்படித்தான் இருப்பார்கள் என்று பெண்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இன்றைய பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு வழியே உலகத்தைத் தெரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். எல்லா ஆண்களும் மனைவியை மரியாதை குறைவாக நடத்துவதில்லை என்ற நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு விட்டார்கள்.  இது தெரியாமல், சென்ற தலைமுறை ஆண்களைப் போலவே நடந்து கொள்பவர்கள் விவாகரத்தைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.  

அந்தக் காலத்தில், கணவனைப் பிரிந்து சென்றால் பிறந்த வீட்டில் வைத்துக் காப்பாற்றுவார்கள் என்கிற சூழல் இல்லாத பெண்கள், கணவன் ரத்தக்காயம் ஏற்படுத்தினாலும் வேறு வழியில்லாமல் அடி, உதை வாங்கிக்கொண்டு குடும்பம் நடத்தினார்கள்.

இன்றைய பெண்கள், விவாகரத்துக்குப் பிறகு வாழ்க்கையை எப்படி நடத்துவது, பிறந்த வீட்டில் நம்மையும் குழந்தையையும் வைத்துக் காப்பாற்றுவார்களா என்று அச்சப்பட வேண்டிய பொருளாதார நிலையில் இல்லை.

Sex Education

கணவன்- மனைவி ஒருவரையொருவர் அன்பாக, மரியாதையாக நடத்துகிற குடும்பங்களில், செக்ஸில்  பிரச்னை இருந்தாலும் அவர்கள் பிரிவதில்லை.  மருத்துவ உதவியை நாடுகிறார்கள். அன்பும், மரியாதையும் கிடைக்காத தாம்பத்தியத்திலும், குடும்ப வன்முறை நிகழும் வீடுகளிலும்தான் விவாகரத்துகள் பெரும்பாலும் நிகழ்கின்றன. மற்றபடி, எங்கோ சிலர் வேகமாக விவாகரத்து பெறுவதற்கு செக்ஸை  ஒரு காரணமாகப் பயன்படுத்தி விடுகின்றனர். மனதுக்குப் பிடித்த நபரைத் திருமணம் முடிப்பது, பரஸ்பரம் அன்பாக இருப்பது என்கிற இந்த இரண்டும் இருந்தால் விவாகரத்துகள் குறையும்” என்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.