சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசுத் திரைப்படக் கல்லூரியில் (எம்.ஜி.ஆர். அரசுத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்) உள்ள திரையரங்கில் பாடம் தொடர்பாகத் திரையிடல் ஒன்று நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக தியேட்டரின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. திரையரங்கின் மேடை மீது அதன் இடிபாடுகள் விழுந்தன. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
கடந்த 2019ம் ஆண்டுதான் இந்த தியேட்டர் புதுப்பிக்கப்பட்டது. தியேட்டரை முறையாகப் பராமரிப்பதில் கல்லூரி நிர்வாகம் அக்கறை செலுத்தாததே இதற்குக் காரணம் எனக் கல்லூரி மாணவர்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர். “அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் மாணவர்கள் சார்பாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து வரும் நடிகர் ராஜேஷிடம் பேசினேன்.
“அன்னைக்கு நான் கல்லூரியில இல்லை. அலுவல் விஷயமாக முதல்வரைச் சந்திக்கப் போயிருந்தேன். அப்பதான் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டேன். நான் இங்கே பொறுப்பேற்று அஞ்சு மாசம்தான் ஆகியிருக்கு. தியேட்டர் கூரை இப்படிப் பெயர்ந்து விழுந்தது பெரிய விஷயமாகிடுச்சு. இந்த மாதிரி எதெல்லாம் போயிருக்கு, எதெல்லாம் சரி செய்யணும்ன்னு இனிமேலதான் கணக்கெடுக்கணும். கல்லூரிக்குப் போனதும் இதுகுறித்து கவனிப்பேன்” என்றார் ராஜேஷ்.