வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
மானுடப் பிறப்புகளில் மனங்கள் மகிழ கொள்ளும் ஓர் உன்னதமான உணர்வென்றால் அது தமது உற்ற பந்தங்களிடையே உண்டான அன்பும், பாசமுமாகத்தானே இருக்க முடியும்.
அவ்வுணர்வுகளின் எழுச்சியை நித்தமும் தந்து எனது இதயங்களிடையே பாச அருவியை பாய்ச்சி ஆகச் சிறந்த அன்பெனும் சுவையை என்னிதயத்திற்குள் சமைத்து என்னுள் அதனை பொதிந்து பரிமாறி பதிய வைத்த புத்துலக தேவதையவள்…
அவளோடு பயணித்த சிறு பிராயங்களில், நான் சிலாகித்து உய்த்துணர்ந்த நினைவுகளை வார்த்தைகளில் வடிப்பெதென்றால் இதயங்களின் அறைகளில் பிரவாகமாய் இன்பம் வழிகின்றது.
என்னிருதயம் முழுக்க அவளது நினைவுகளால் நிரம்பி வழிந்து நெஞ்சை நனைக்கிறது.
அவளுடனான சிநேகம், பாசம், உருக்கம், உறைவு, இப்படியான அன்பின் பலவடிவ பந்த பிணைப்பு இருதயத்தை நனைக்க, கழிந்து போன அந்த சிறு பருவத்தை எண்ணி சிலாகிக்க இன்னும் சில இதயங்கள் கூட இருந்தால் நன்றாக இருக்கும்! என்றே எண்ணத் தோன்றுகிறது.
விரல்களில் நின்று விளையாடும் ஒற்றை குச்சி மிட்டாயை இருவரும் ஒன்றாய் சுவைக்க அதன் ஒரு முனையை தவறி நான் கடித்து விடுகையில் வாய்க்குள் ஒளிந்து கொண்ட சிறு துண்டு பிசுறுக்காக கள்ள அழுகைபூண்டு செல்லமாய் சண்டையிட்டு சீறிப்பாய்வாள்..
அச்சமயங்களில் அவளது பிஞ்சு கரங்களில் வாங்கப்படும் பன்ச்கள் அனைத்தும் மத்தளத்தின் பக்கங்களாய் நின்றனைத்து நெஞ்சுக்குள் தாளமிடும், அவ்வடிகளில் வலி கொண்டதாய் நானும் கள்ளமாய் அழுவேன்!, எனதழுகையை நிஜமென நம்பி கண்ணீர் வருமுன்னே என்னிரு கன்னங்களை துடைத்திட்டு மொத்த மிட்டாயையும் எனது வாய்க்கு ஊட்ட முன்வருவாள் அவளின் அந்த இரக்க கரங்களில் அரக்க குணம் கூட அகம் குளிர்ந்து மனமிரங்கி வீழ்ந்திடும்.
பகல் நேர உறக்கத்தில் அயர்ந்து உறங்கும் எனது விழிகளை அவளின் விரல் கொண்டு விலக்கி என் விழி பார்த்து சிரிப்பாள்.,
நான் பதறி விழித்துப் பார்த்ததும் அவளது கயல் போன்ற சிறு விழிகளை விரித்து என்னிடம் வினவுவாள்.,
விளையாட வருவாயா?..
உறக்கம் களைந்த விரக்தியில் சினங்கொண்டு எழும் எனைக்கண்டு சிறிதே ஏகடியம் கொண்டு இதழோரங்களில் சிறிது சிரிப்பை உதிர்த்து, முக பாவணைகளால் எனது இருதயத்தை சிறை செய்வாள்.
உணவை பகிர்ந்துண்ணும் மதிய வேளைகளில் ஒற்றை உணவுப் பருக்கையை சுமந்துவரும் அவளது இரட்டை விரல் பிடித்து அவளது கன்னம்தனை செல்லமாய் கிள்ளி அவள் கிள்ளி வந்த சிறு பருக்கை அள்ளி உண்ணும்போது அமிர்தமாய் இனிக்கும், அது நாவை விட்டு உதரத்தில் இறங்க மறுக்கும்.
அவளோடு நானிருக்கும் வேலைகளிலெல்லாம் அன்பு சூழ் உலகுக்குள் அவளின் ஆத்மார்த்தமான அன்பாய் அவளுக்கு நான் ஆகிடுவேன் .
வீட்டின் திண்ணை மீதிருந்து தாவியேறி எனது தோள்களைப் பற்றிப் பிடித்து அந்த தோள்களையே இருக்கையாக்கி அமர்ந்தபின் என்னைவிட உயரத்தில் இமய சிகரத்தில் ஏறிவிட்டதாய் இறுமாப்பு கொள்வாள்.
வீட்டின் தோட்டத்தில் வீற்றிருக்கும் மஞ்சனத்தி மரக்கிளையை என்னைப் பிடித்திழுத்து மண்டியிடச் சொல்வாள் அவளின் ஆசைக்கிணங்கி எனது பிடிக்குள் மடங்கி மண்டியிடும் மரக்கிளையிலிருந்து மஞ்சள் மங்களமாய் வீற்றிருக்கும் அதன் ஒற்றைப் பூவை பறித்து அவளின் பூவிதழினில் ஒற்றிக் கொள்வாள். அந்தப் பூவும் நாணம் கொண்டு அவளது இதழணைத்து ஒன்றிகொள்ளும்.
வெகு நீண்ட நேரத்திற்குப் பின் அவளுக்கு எட்டும் தூரத்தில் நான் வந்து நின்றதும் அதுவரையில் விளையாட ஆளின்றி தவிக்கும் தனது ஏக்கம் கலைந்ததென ஏறி அமர்ந்து கொள்வாள் எனது கரங்களிலே..
நான் விரும்பி விளையாடும் பம்பரங்களைப் பறித்துக் கொள்வாள், கோலிக்குண்டை கரங்களில் ஒளித்து வைத்துக் கொள்வாள் அவளோடு மட்டும் விளையாட கெஞ்சி கொள்வாள்..
கூட்டை தேடி வந்த சிறு குருவியைப் போல் குதூகலிப்பாள் அன்னையோடு சேர்ந்து இருவரும் குளிக்கும் குளத்தங்கரை குளியலிலே…
அன்னையவளின் கன்னச்சுவையை எங்கள் இதழ்களால் கவ்விக் கொள்ள முனையும் பொழுதில் என்னை விட்டும் முந்திக் கொள்வாள், என்னோடு போட்டியிட்டு அன்னையின் கன்னத்தை தமது முத்த ஒத்தடங்களால் சிவக்கச் செய்வாள்.
இதுபோன்று அவளோடு பாசம் பழகிய பல்வேறு பால்ய நினைவுகள் நெஞ்சினில் நிறைந்தாடும் அன்றைய பகல் உறக்கத்தில்..
‘மாமா’ ..
எனும் ஓர் கந்தர்வ குரலுக்கு ஆட்பட்டு எனது சிற்றுறக்கம் களைந்து பதறியடித்து பாதியிலே விழித்துக் கொள்கிறேன்.
எனது விழி எதிரே வந்து நின்றான், அவளின் குல கொழுந்து என்னை. ‘மாமா’ என விளித்து….
தனது பிஞ்சு திராட்சை விழிகளை உருட்டிக் கொண்டே தனது ஆரஞ்சு சிற்றிதழ்களை சிறிதே மெல்லமாய் பிரித்து..
விளையாட வருவாயா?//..
என அழைத்தான்..
பல வருடங்களுக்கு முன்னான அதே வினா?
மீண்டும் தலைமுறை இடைவெளிக்குள் அவனது இதழ்வழி தவழ்ந்து எனது செவி வெளிக்குள் விழுந்து எனக்குள் ஆர்ப்பரித்தது..
அவனை வாரியணைத்து, கடந்து விட்ட காலங்களில் அவனன்னை அமர்ந்து பயணித்த எனது அதே தோள்களை தோணியாக்கி தூக்கிச் செல்கிறேன்..
அவனோடு மீண்டுமொருமுறை பயணமாகிறேன்..
எனது தங்கையவளின் நிழலோடும், அவள் எனக்கு தோள்களில் தந்திருக்கும் அவளது நிஜத்தோடும்…
பாசப் பயணங்கள் யாவும், முடியாமல் முளைத்துக் கொண்டே இருக்கின்றன..
நமது முடியும் ஆயுள்வரை…
எண்ணமும், எழுத்தும் …
பாகை இறையடியான்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.